தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.  இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


தொடர்ந்து சிறு தூறலாக மழை காலை முதலே பெய்து கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக 3 மணி நேரத்திற்கு மேலாக இரவு வரை கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், குடவாசல் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழையும், வலங்கைமான் பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், நீடாமங்கலம் பகுதியில் 3.5 சென்டிமீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் ஒருபுறம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


மஹாளய அமாவாசை - முன்னோருக்கு வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?




நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மாவூர், கச்சனம், கொரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், இருள்நீக்கி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆறுகளிலும் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் குறுவை நெற்பயிரில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பது சிரமம் என விவசாயிகள் கருதுகின்றனர். பயிர் காப்பீடு இல்லாத சூழலில் தங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




Biggboss Tamil Episode 2 | கண்ணீர் கடலில் பிக்பாஸ் வீடு.. ராஜுவின் கண்டெண்ட்டும், பிக்பாஸின் ஸ்கெட்ச்சும்..!


உடனடியாக மாவட்ட வருவாய்த் துறையும், வேளாண் துறையும் மழைநீர் தேங்கி உள்ள வயல்களை ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீடு தொகையை வழங்க வேண்டுமெனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.