காவிரியில் இருந்து கல்லணையில் வெண்ணாறு பிரிந்து வந்து, தென்பெரம்பூரில் வெண்ணாற்றில் வெட்டாறு பிரிகின்றது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாசனத்திற்கும் ஆறுகள் என்பதால், காவிரி டெல்டா பகுதியில் மிகவும் முக்கியமான பகுதியாக இதையும் அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள். மேலும் அப்பகுதி மரங்கள் சூழ்ந்திருப்பதால், மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கும். 148 ஆண்டுகள் பழமையானது என்பதை கருத்தில் கொண்டு சுமார் 30 வருடங்களுக்கு முன்பு பொது மக்களை கவரும் வகையில், சுற்றுலா பகுதிகளாக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை நிர்வாகம், ஆறுகள் பிரியும் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குழந்தைகளுக்கான பூங்காவைஅமைத்தனர். இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கும் சறுக்கு விளையாட்டுகள், ஊஞ்சல், குகை சறுக்கு, பூச்செடிகள், அழகு செடிகள், வண்ணமயமான மின் விளக்குகள், அடுக்கு விளக்குகள் , முரட்டுக்காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் யானையுடன் வலம் வரும் கரிகால சோழன் உள்ளிட்ட சுதை சிற்பங்கள் என பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.




பின்னர் அப்பூங்காவை பொதுப்பணித்துறை முறையாக பராமரிக்கப்படாததால், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்கள் உடைந்தும், சறுக்கு விளையாட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளங்களும், ஜல்லிக்கட்டு பொம்மைகள் உடைந்தும், கரிகாலன் பொம்மை முறிந்து கீழே விழுந்தும், யானையின் காதுகள் உடைந்தும் பார்ப்பதற்கே பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது. காவிரி டெல்டா பகுதி மக்கள் தண்ணீருக்கு கஷ்டப்படக்கூடாது என பல ஆறுகளையும், அணைக்கட்டுக்களையும் கட்டிய கரிகாலசோழனின் உருவசிலை கேட்பாரற்று கிடப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.


இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு என்ற பெயரில் பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதியும் பற்றாகுறையானதால், சீரமைக்கும் பணி பாதியிலேயே நின்றது.பின்னர் பராமரிக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் கைவிட்டனர். தற்போது பார்ப்பதற்கே பரிதாப நிலையில் உள்ள பூங்காவில் சமூக விரோதமான செயல்கள் நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக வெண்ணாறு வெட்டாறு பிரியும் தென்பெரம்பூர் பூங்காவை போதுமான நிதி ஒதுக்கி , அழகுப்படுத்தி சீரமைத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து மக்கள் நல பேரவை ஆலோசகர் ஜீவக்குமார் கூறுகையில், தென்பெரம்பூரில் பிரியும் வெண்ணாறு வெட்டாறு பகுதி இயற்கையில் பசுமையானதாகவும், வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். வருடந்தோறும் இயற்கை காற்றுடன் இருக்கும் பகுதியாக இருப்பதால், இந்த பகுதியில்  பூங்கா அமைத்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் ,சீண்டுவாரற்று கிடக்கிறது. இதே போல் இடங்கள் வேறு மாநிலத்தில் இருந்தால், அவர்கள் பெரிய அளவில் சுற்றுலா பகுதிகளாக்கி இருப்பார்கள். ஆனால் தமிழக அரசின் நிர்வாகத்தன்மையால், அங்குள்ள கரிகாலன் சோழன் சிலைகள் உள்ளிட்டவைகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கிறது.




தஞ்சாவூர் பள்ளியக்கிரஹாரத்தில் இருந்து தென்பெரம்பூர் செல்லும் சாலை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால், மிகவும் மோசமான நிலையில், காட்சியளிக்கின்றது. அப்பகுதிக்கு சென்று வரும் பொது மக்கள், சுற்றுலாவாசிகள் அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளாகி சென்று வருகின்றார்கள். மாவட்ட நிர்வாகம், தென் பெரம்பூர் சாலையை அகலப்படுத்தி, புதிய தார் சாலை அமைப்பதற்காக பல லட்ச ரூபாய் செலவில் கருத்துரு அனுப்பட்டது. ஆனால் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.


எனவே தமிழக அரசு, 148 ஆண்டுகள் பழமையான வெண்ணாறு-வெட்டாறு பிரியும் பகுதியை தமிழகத்தின் பாரம்பரியம், மிகவும் தொன்மையானவகையாக அறிவிக்க வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிக்கு விவசாயம் செழிப்பதற்காக, பிரியும் பகுதியாக விளங்கும் தென்பெரம்பூரில் உள்ள பூங்காவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கி, பூங்காவை சீரமைத்து, சுற்றுலா மையமாக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், சாலை அகலப்படுத்தி, தார் சாலையாக அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.