தஞ்சாவூர்: தஞ்சையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் ஆகியோரை தஞ்சாவூர் போலீசார் தட்டித் தூக்கி சிறையில் அடைத்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 


கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு


தஞ்சை டவுன் கரம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சாலை சுற்றுலா மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் திடீரென்று சுரேஷ்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300ஐ பறித்து சென்றார். இதனால் வெகுவாக அதிர்ச்சி  அடைந்த சுரேஷ்குமார் இதுகுறித்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இந்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்குமாரிடம் பணம் பறித்தவர் தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த உத்தமநாதன் (52) என்பதும், கத்தியை காட்டி பணத்தை பறித்ததும் தெரியவந்தது.


நடந்து சென்றவரிடம் பணம் பறித்த 2 பேர்


இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தஞ்சை விளார் சாலை ஜெகநாதன்நகரை சேர்ந்தவர் ராஜா (27). இவர் நேற்று முன்தினம் வடக்குவாசல் சுடுகாடு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் ராஜாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.200ஐ பறித்து சென்றனர்.


இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், மேலவீதியை சேர்ந்த கார்த்திகேயன் (48), வீரராகவன் (55) ஆகியோர்தான் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இப்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் தஞ்சாவூர் போலீசார் தட்டி தூக்கி சிறையில் அடைத்தனர்.


Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!


பைக்கை திருடிய வாலிபர் வசமாக சிக்கினார்


இதேபோல் தஞ்சையில் வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை  லாவகமாக லவட்டி சென்ற வாலிபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை விளார் சாலை அண்ணாநகரை சேர்ந்தவர் பசுபதி மகன் மணிகண்டன் (21). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி வீட்டிற்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. உடன் அக்கம்பக்கத்தில் மணிகண்டன் தன் பைக்கை தேடிப்பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.


இதுகுறித்து மணிகண்டன் தஞ்சை தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த மூங்கில்குமார் என்பவரின் மகன் சந்திரமோகன் (19) தான் பைக்கை திருடியவர் என்பது தெரிய வந்தது.


இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் திருடிய பைக்கையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் இந்த உடனுக்குடான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இதேபோல் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும் போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.