தஞ்சாவூர்: நாங்க இருக்கிறோம் என்று பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருச்சி மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன. மனித நேயம் எப்போதும் மரித்து போவதில்லை என்பதற்கு இதுவும் உதாரணம். இவர்களும் எங்களின் சகோதர்கள்தான் என்று சொல்லாமல் சொல்கின்றனர்.
தமிழகத்தை மிரட்டிய பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளின்படி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான, நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரணப் பைகள் சரக்கு வேன் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருச்சி மாநகராட்சி சார்பில் மழை, வெள்ளத்தால் பாதித்த விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் மேயர் மு. அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் சரவணன் ,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தார்கள்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37, 500 உணவு பொட்டலங்கள் லெமன் சாதம் , புளி சாதம் , 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் ஆயிரம் பிஸ்கட் பாக்கெட் கள் ஆகியவையை புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
01.12.2024 அன்று நிவாரண பொருட்கள் மற்றும் மாநகராட்சியின் இரண்டு இளநிலை பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணி மேற்கொள்வதற்காக 150 தூய்மை பணியாளர்கள், 5 சுகாதார ஆய்வாளர்கள், 10 தூய்மைப்பணி மேட்பாளையாளர்கள், மழை நீர் உறிஞ்சுவதற்கான 10 எச்பி மோட்டார்கள் கொண்டு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு மிகச் சிறப்பாக பணியை செய்து கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல இளநிலை உதவியாளர்கள் கொண்ட குழுவினர் அப்பகுதியில் உள்ள தேங்கியுள்ள தண்ணீர் ரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றி சிறப்பாக பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நிவாரணப் பொருள் அனுப்பும் நிகழ்ச்சியின் போது மாநகராட்சி நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் மற்றும் துணை ஆணையர்,மண்டல உதவி ஆணையர்கள், உதவி செய்ய பொறியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிவாரண உதவிகள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நாங்கள் இருக்கிறோம் என்று புயலால் பாதித்த மக்களை நினைத்து தங்களின் சகோதர, சகோதரிகளாக உதவிகளை முகம் தெரியாத நபர்கள் கூட செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மனித நேயம் எப்போதும் மரிப்பதில்லை என்பதற்கு இது பெரும் உதாரணம் என்றால் மிகையில்லை.