தஞ்சாவூர்: தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கடந்த 29ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் வினோத் அத்துமீறி நுழைந்து மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து கருப்பு பேஜ் அணிந்து மருத்துவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல் வினோத் முன்னிலை வகித்தார்.


மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்,  மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தின் போது மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். 22 மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமையை குறைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.




தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுமார் ஆயிரம் மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். மகப்பேறு மருத்துவர்களின் பணியிடங்கள் இரட்டிப்பாக்கப்பட வேண்டும். கூடுதல் மகப்பேறு மருத்துவர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும். அரசு மகப்பேறு மருத்துவர்களை மென்டாரிங் (Mentoring) முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.


மகப்பேறு இறப்பு தணிக்கையில் (MATERNAL DEATH AUDIT) மருத்துவர்கள் அளித்த சிகிச்சை சம்பந்தமான தணிக்கையை மாநில அளவில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்ட குழுவை கொண்டு முறையாக நடத்த வேண்டும். மகப்பேறு இறப்பின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான தணிக்கை மட்டுமே மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், இணை இயக்குனர், துணை இயக்குனர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டும்.


தற்போது நடைமுறையில் உள்ள ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரே ஒரு தணிக்கை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் இதுபோன்று மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்களை மரியாதை குறைவாக பேசுவது என்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்று மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபடும் போது அதிகம் பாதிக்கப்படுவது ஏழை நோயாளிகள் தான். எனவே மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியதும் அரசின் கடமை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.