வரும் 10 ஆம் தேதி இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் பிரமாண்டமாக தயாராகும் நாகை துறைமுக பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு வருகின்ற 10 ஆம் தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பயணிகள் நிலைய கட்டிடத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கொச்சினில் உருவாக்கப்பட்ட இலங்கை செல்லக்கூடிய "செரியபாணி!" பயணிகள் கப்பல் இன்று மாலை நாகை துறைமுகம் வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு துறை (immigration), சுங்கத்துறை, பயணிகள் சோதனை கருவி, மருத்துவ பரிசோதனை, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.



 

மேலும், துறைமுகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 6500 ரூபாய் ஒரு நபருக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேச்துறைக்கு ஒரு பயணி இலவசமாக 50 கிலோ எடையுள்ள பொருட்கள் எடுத்து செல்லலாம். இலங்கை செல்வதற்கு அந்த நாட்டின் விசா பெறுவது மற்றும் பாஸ்போர்ட் கட்டாயம். விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படும் என்று இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் நிறுவன இயக்குனர் செய்யதுஹாசிப் ஜூஹைர் தெரிவித்துள்ளார். நாகையில் இருந்து இலங்கை நாட்டிற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பது வரலாற்று திருப்புமுனை என்று தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழக அரசின் முயற்சியால் பல ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்த நாகை துறைமுகம் மீட்டெடுக்கப்பட்டு இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். முழுவதும் ஏசி வசதியுடன் 150 இருக்கைகள் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள, கப்பலில் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து 10 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கப்பல் புறப்பட்டு 3 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் சென்றடையும்.