காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற உள்ள கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெற்ற சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய பொறுப்பாளர்கள் பாராட்டு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து பேசினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, உணவு தானிய பொருளுக்கான வரியை 5 சதவீதமாக தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது சிறுதானிய உணவுப் பொருட்களுக்கான வரியை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல ஜிஎஸ்டி வரி 28%, 18%, 12% என உள்ளதை இரண்டே வரி விதிப்பாக மாற்றி அமைத்தால் 140 கோடி மக்களும் வரி செலுத்துவார்கள். இதன் மூலம் வரி வருவாய் அதிகரிக்கும். மேலும், ஜிஎஸ்டி சட்ட விதிகளையும் எளிமைப்படுத்த வேண்டும். பண்டிகை காலத்தில் உணவுப் பொருள்களின் தரத்தை உற்பத்தி செய்யும் இடத்திலேயே உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
அதை விடுத்து கடைகளில் சோதனை என்ற பெயரில் வணிகர்களை அலைகழிக்க கூடாது. ஏனெனில் ஏற்கனவே ஆன்லைன் நிறுவனங்கள் வணிகர்களை சுரண்டி வருகிறது. எனவே, அரசும், அரசுத்துறை அதிகாரிகளும் வணிகர்களை பாதுகாக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு அறிவித்துள்ளார்கள். இதில் பங்கேற்பது குறித்து நிர்வாகிகளிடம் இன்று ஆலோசித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முடிவை அறிவிக்கும். தமிழகத்துக்கு திருப்பி செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு செலுத்தினால் தமிழகம் செழிப்பாக இருக்கும். இதனை தமிழக முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.
எங்களைப் போன்ற சங்கத்தினரும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளதற்கு அண்டை மாநிலங்களில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதும், வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் குட்கா பொருளை எடுத்து வருவதுமே காரணம். குட்கா பொருளை விற்கும் கடைக்காரர்களின் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மொத்த வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கடை வியாபாரிகளும் குட்கா பொருளை விற்பனை செய்யக்கூடாது” என்றார். இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், சேம்பர் ஆப் காமர்ஸ் நிர்வாகிகள் மதியழகன், சிவலிங்கம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.