தஞ்சாவூர் அய்யன்குளத்திலிருந்து சிவகங்கை குளத்தை நோக்கி செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை பல ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு. மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்துள்ளது அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக சுமார் 1289 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டியாகும் நகரப்பகுதியில் குடிநீர், வடிகால், பழமையான குளங்கள், நீர் நிலைகள், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், ரோடு வசதிகள், சரித்திர புகழ்வாய்ந்த இடங்கள், அரண்மனை மற்றும் புராதன கட்டிடங்கள் இருப்பதால், அதனை பழைய மாறாமல் அப்படி பழைய நிலையைும் மாற்றாமல் நவீன முறையில் மாற்றி முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. 


புராதன நகரமான தஞ்சையில் நீராதாரத்துக்காக மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல ஆக்கிரமிப்பு காரணமாக படிப்படியாக மறைந்தன. தஞ்சை நகரை ஆண்ட மன்னர்கள், காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக, பெரிய கோயிலை சுற்றியுள்ள  அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் அகழி பாலத்திலிருந்து நீர்வழிப்பாதைக்கு தண்ணீர் வருவதற்கான வழியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்  தஞ்சை  அய்யங்குளத்திற்கு 800 மீட்டர் நீர்வழிப்பாதை மூலம் தண்ணீர் தடையின்றி செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அகழியில் இருந்தும் நீர்வழித்தடம் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி  நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.  சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பறந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.


பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் நீர் ஆதாரத்திற்காக பிரமாண்டமான வகையில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது. இந்த குளத்தில் இருந்து மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நீர்வழிப்பாதை நாளடைவில் செயலற்று விட்டது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன்குளம் மற்றும் சாமந்தான் குளம் 10 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.


மேலும் இந்த குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க நீர்வழிப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்தை நோக்கி செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடித்தனர். இந்த நீர்வழிப்பாதை மொத்தம் 1,200 மீட்டர் நீளம் உடையது ஆகும். சாலை மட்டத்தில் இருந்து 10அடி ஆழத்தில் இந்த நீர்வழிப்பாதை உள்ளது.  சுற்றிலும்  சுடுமண் செங்கல்களால் இந்த நீர்வழிப்பாதை 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 300 மீட்டரில் இருந்து மட்டுமே தண்ணீர் சென்றது. தற்போது சிவகங்கை பூங்கா அருகே மேலவீதிக்கு திரும்பும் இடத்தில் இருந்து 800 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுரங்க நீர்வழிப் பாதையில் 9 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளையும் (அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக) கண்டுபிடித்தனர். இந்த  நீர்வழிப்பாதை மீது தற்போது வீடு, கடைகள், கோவில் போன்றவை உள்ளன. தற்போது 800 மீட்டர் தூரத்தில் இருந்து நீர்வழிப்பாதை மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து குளத்திற்கு தண்ணீர்  விடப்பட்டது. தண்ணீர் தடையின்றி குளத்திற்கு செல்கிறது.




இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பார்வையிட்டார். அப்போது செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர், மேலாளர்கிளமெண்ட், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.  சிவகங்கை  பூங்காவில் உள்ள குளத்தில் இருந்து இன்னும் 400 மீட்டர் நீளத்திற்கு மட்டும் நீர் வழிப்பாதையை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சீனிவாசபுரம் செல்லும் சாலையில் உள்ள அகழி பாலத்தில் இருந்தும் இந்த நீர்வழிப்பாதைக்கு தண்ணீர் வருவதற்கான வழியும் உள்ளது. அதையும் கண்டறியும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நீர் வழிப்பாதைகள் கண்டுபிடித்தால், அதனை சீர்படுத்தி, நீர் வரும் வகையில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.