பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டு என தனது மொபைலுக்கு வந்த எஸ்எம்எஸ் காரணமாக அதில் இருந்த லிங்க்-ஐ ஓப்பன் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த கணக்காளர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நூதன முறையில் 1,39,900 திருடியுள்ளனர்.


தஞ்சாவூர் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவர்  தஞ்சை நகரில் சிறிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கணக்காளராக உள்ளார். தற்போது சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதனால் கட்டுமானப் பொருள்கள் வாங்குவதற்காக தனது வங்கி கணக்கில் ஓரளவு பணம் இருப்பு வைத்துள்ளார். இந்நிலையில், பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் எனக்கூறி அவரது மொபைலுக்கு அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு மெசேஜ் வந்தது. அதிலிருந்த லிங்க்-ஐ அவர் ஓப்பன் செய்து அதில் கேட்கப்பட்டிருந்தவாறு தனது வங்கி சேமிப்புக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அவருக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் வந்துள்ளது. அதை அவர் பதிவேற்றம் செய்தபோது ஒவ்வொரு முறையும் எரர் எனக் காட்டியுள்ளது. இவ்வாறாக 3 முறை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது அவரது அவரது வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.1,39,900 எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.




முதலில் ரூ.99,900 எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்து இரண்டு முறை தலா ரூ.20,000 வீதம் மொத்தம் ரூ.40,000 எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி உடனடியாக ஆன்லைனில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் க்ரைம் போலீஸில் அக்டோபர் 20 ஆம் தேதி நேரில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில், சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.


இதற்கிடையே, அவரது சேமிப்புக் கணக்கிலிருந்து முதலில் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட 99,999ஐ திருடர்கள் எடுக்க முடியாதவாறு சைபர் க்ரைம் போலீஸார், வங்கி அதிகாரிகள் உதவியுடன், அவரது வங்கிக் கணக்கை முடக்கிவிட்டனர். எனினும் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து தலா ரூ.20,000 வீதம் எடுக்கப்பட்ட ரூ.40,000ஐ மீட்க முடியவில்லை.


பிகார் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திலிருந்து இத்தொகை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்படி அடையாளம் தெரியாத திருடர்களை சைபர் க்ரைம் தேடி வருகின்றனர். வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்ட், ஓடிபி தகவல்களை யாருக்கும் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என சைபர் க்ரைம் போலீஸார் பல்வேறு வகையிலும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் தங்களது மொபைலுக்கு வரும் இதுபோன்ற மெசேஜ் மற்றும் ஃபோன் கால்களை உண்மையென நம்பி கொஞ்சங்கூட பொறுப்பின்றி செயல்பட்டு தங்களது வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்து இதுபோல ஏமாந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 5 க்கும் மேற்பட்டோர் பணத்தை பறிக்கொடுத்துள்ளனர்.