தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2021–22 ஆம் ஆண்டிற்கான பொதுக் கணக்கு குழு அமைப்பின் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் அரசு கொறடா கோவிசெழியன், எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், ஜவாஹிருல்லா, மாரிமுத்து, உள்ளிட்ட உறுப்பினர்கள், பழைய பேருந்து நிலையம், அரசு கூர் நோக்கு இல்லம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெறும் கட்டுமான உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர்,  செய்தியாளர்களை சந்தித்த பொது  கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை,


கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், சரியான நிர்வாக திறமையின்மை, அரசு பணம் விரயம் என பல தலைப்புகளில், சி.ஏ.ஜி., அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் எந்தெந்த தவறுகள் களையப்படவேண்டும். வரும் காலங்களில் தவறுகள் நடக்காமல் இருப்பது எப்படி, இதற்கு யார் பொறுப்பு ஏற்பது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.




கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசு கட்டிடங்கள் தரமானதாக இல்லை. தனியார் கட்டித்தரும் அரசு பள்ளி கட்டிடம் தனக்காக சொந்தமாக கட்டுவதுபோல் தரமானதாக கட்டி தந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் அரசு பணத்தை எடுத்து கட்டுபவர்கள் தரமாக கட்டுவதில்லை. அதே பள்ளியில் அவர்கள் குழந்தை படித்தால் இவ்வாறு தரமற்ற முறையில் கட்டுவார்களா என கேள்வி எழுப்பினார். 


ஒரு பள்ளியில் ஆய்வு செய்த போது கழிவறை முறையாக இல்லை. அங்கு தண்ணீர் வசதி இல்லை. புதர்மண்டி கிடக்கிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கும். அதை எப்படி மாணவர்கள் பயன்படுத்த முடியும். கடந்த ஆட்சியில், மருத்துவதுறையில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை, ஆடிட்டர் ஜெனரல் தணிக்கை குழு இந்த குறைகளை கண்டறிந்துள்ளது.




தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகளில், காலாவதியான மருந்துகள் விநியோகம் செய்துள்ளதை, ஒப்புக் கொண்டுள்ளார்கள்.  26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளை பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக 2013–14 ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்தி உள்ளவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதா, உடல்நலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதா என கண்டறியப்படும். தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 




தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளை ஒரு பக்கமும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை ஒரு பக்கமும் வைத்திருக்கின்றனர். இரண்டு பேரையும் ஒரே வளாகத்திற்குள் வைத்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு. சிறையிலிருந்து சிறார்களை பொருத்தவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைத்து வைத்து இருக்கக்கூடாது என்பது விதி உள்ளது. ஆனால், கூர்நோக்கு இல்லத்தில் 1 மணி நேரம் மட்டுமே வெளியில் அனுமதித்து விட்டு, மீதி நேரம் அடைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை சுதந்திரமாக வெளியே விட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.