திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். திருவாரூர் மாவட்டம் திருவாரூர் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் அடியக்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததாவது…



 

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவம் 2021-2022ஆம் ஆண்டில் 326 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் 8 நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இது நாள் வரை நடப்பு காரீப் பருவத்தில் சன்ன ரகம் 58,666 மெட்ரிக் டன்களும் பொது ரகம் 44,508 மெட்ரிக் டன்களுகம் ஆக கூடுதலாக 1,03,174 மெட்ரிக் டன்கள் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் சுமார் 61,000 மெட்ரிக் டன் சேமிப்பு மையங்களுக்கு நுகர்வு செய்யப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. தினசரி சுமார் 8000 மெட்ரிக் டன்கள் வீதம் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

 

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தினசரி 1000 நெல் மூட்டைகள் வீதம் கொள்முதல் செய்ய கொள்முதல் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுகிறது. தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தினசரி நகர்வு செய்யப்பட்டு கிடங்குகளில் பாதுகாப்பாக சேமிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எதுவும் மழையினால் பாதிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் தெரிவித்தார். இவ்வாய்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.