உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மனிதகுலத்திற்கு பெரும் இன்னல்களையும் சவால்களையும் விடுத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்புவதற்காக உலக நாடுகள் வழி தெரியாமல் திண்டாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.




அதில் ஒன்றாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாவட்டங்கள் தோறும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதும் மருத்துவமனைகளை ஆய்வு செய்வதும் என பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்ட 6 கேஎல் கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்  உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கொரோனா வார்டில் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 




இந்த சூழலில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையால்  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுவதால், பாதிப்பில் இருந்து குழந்தைகளை காக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து, மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் 40 படுக்கைகள் மற்றும் 6  தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மயிலாடுதுறை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். 




மக்களின் உயிர்களை பலி வாங்கி வரும் கொரோனாவின், அடுத்த இலக்காக குழந்தைகளை தாக்க காத்திருகிறது என்ற செய்தி அனைவரையும் வேதனை அடைய செய்திருக்கும் இந்த வேளையில், குழந்தைகளுக்கான கொரோனா  சிகிச்சை மையத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட்ட மனநிலையில், பலூன் கட்டி அலங்கரித்து, ரிப்பன் வெட்டி அமைச்சர் திறத்து வைத்திருப்பது, கொரோனா மூன்றாம் அலையை வரவேற்கும் வண்ணம் அமைந்து  பலரது மனதையும் புண்பட  செய்திருப்பதாக அதனை கண்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலையை எதிர்நோக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்ட தக்கது என்றாலும், இது போன்ற மக்கள் அல்லல்படும் பேரிடர் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாததால், அவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் நிகழ்வுகள்  அரசிற்கு அவப்பெயரை பெற்றுத் தருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


 


PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!