அந்நியன் தோன்றுகிறார்... வேலாயுதம் தோன்றுகிறார்... இந்தியன் தாத்தா தோன்றுகிறார் என்றெல்லாம் சினிமாவில் கொடுக்கும் அதே பில்டாப் தான், கடந்த சில நாட்களாக மதன்குமார் மாணிக்கம் என்கிற பப்ஜி மதனுக்கு தரப்பட்டது. ‛முடிஞ்சா பிடிச்சுப்பார்...’ என்கிற தொணியில் தான் அவரும் சவாலெல்லாம் விடுத்திருந்தார். ‛ஜல்லிக்கட்டில் அடங்காத மாடே... பிடிமாடாய் சிக்கும் போது... இதென்ன சுண்டைக்காய்...’ என்று தான் போலீஸ் இந்த வழக்கை கையாண்டது. இந்த நவீன உலகத்தில் குற்றவாளிகள் தடயங்களை அழிக்க முடியாது. உருவாக்க மட்டுமே முடியும். அதுவும் போலீசாருக்கு உதவும் இணையத்தை குற்றத்திற்கு பயன்படுத்திவிட்டு, ‛நான் வி.பி.என், யூஸ் பண்றேன்... என்னை நெருங்க முடியாது; என்னை தொட்ட நீ கெட்ட...,’ என சினிமா டயலாக்கெல்லாம் பேசிய மதன், இன்று பப்ஜியை தொட்ட பாவத்திற்கு கப்சிப்னு எங்கேயோ ஒழிந்திருக்கிறார்.




மதன் போட்ட திட்டம்!


‛என் தங்கம்... என் உரிமை...’ மாதிரி, என் சேனல்... என் பேச்சுனு... ஏகத்துக்கும் நாராசமாய் பேசி, நடுத்தெருவுக்கு வந்திருக்கும் மதன், உண்மையில் அதை வைத்து வாழ்ந்திருக்கிறார். மாதம் 7 லட்சம் ரூபாய் வரை தனது ஆபாச அர்ச்சனை யூடியூப் சேனல்கள் மூலம் வருவாய் பார்த்துள்ளார். மற்றவர்களை திட்ட திட்ட சப்ஸ்கிரைபர்கள் குவிந்ததைப் போலவே காசும் குவிந்திருக்கிறது. 7 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை வைத்துக் கொண்டு, வாய்க்கு வந்ததை பேசி வயிறு நிரப்பிய மதனை, ஒரு தரப்பு கொண்டாடியது தான் அதில் வியப்பானது. வீட்டில் அம்மா... அப்பா திட்டுனா மூஞ்சிய தூக்கிட்டுப் போற பையன் கூட, யாருன்னே தெரியாத ஒருத்தன் திட்டுறதை ஆர்வமா வந்து கேட்டுட்டு, அவனுக்கு பேப்பர் தூவிட்டு போயிருக்கான். இந்த தனி உலகத்தில் மதன் சர்வாதிகாரினா, சேனலுக்கு அவர் மனைவி கீர்த்திகா நிர்வாக அதிகாரி. இதுல என்ன கொடுமைன்னா... கணவன் சிலாகிச்சு பேசும் போது... மனைவியும் உடன் உரையாடியிருக்கிறார்.




தடை செய்யப்பட்ட ஒரு விளையாட்டு... அதை கோல்மால் பண்ணி வேற நெட்வொர்க் மூலம விளையாடி, அதை யூடியூப்ல ஸ்ட்ரீம் பண்ணி, அதுல காசு பாத்துருக்காங்க. ராஜா ராணியில் சந்தானம் சொல்வாறே.... ‛ஜப்பான்காரன் என்னெல்லாம் கண்டுபிடிக்கிறான்... இது எதை கண்டுபிடிச்சிருக்கு பாரு...’னு  ஒரு டயலாக், அது தான் நியாபகத்துக்கு வருது. குட்டி குட்டி பசங்களை விளையாட வெச்சு... அவனுங்களை கெட்ட வார்த்தைகளில் குஷியாக்கி , பணத்தை அள்ளுறது தான் திட்டம். போட்ட பிளான்... போட்ட காசை விட கொட்டோ கொட்டுனு கொட்டுனதால, மதன் மன்மதனா மாறினாரு. தான் யாருன்னு காட்டுனா... அதில் இருக்கிற விறுவிறுப்பு போயிடும்னு தன்னோட உருவத்தை சஸ்பென்ஸா வெச்சி, கேடி வேலை பார்த்து கோடிகளை அள்ளிருக்கிறார்.




போலீசுக்கு சிக்கிய எவிடன்ஸ்!


பழகுனது எல்லாம் 12ம் வகுப்பு பசங்க கூட... ஆனா விட்ட சவாலெல்லாம் தாவூத் ரேஞ்சுக்கு இருந்தது  தான் போலீசுக்கே தலை சூடாக காரணமாகிடுச்சு. நான் கூட இன்னும் ஓரிரு வாரம் எடுக்கும்னு தான் நெனச்சேன். ஆனால் அடையாளமே தெரியாதுனு சொன்ன ஆளோட வீட்டை மடக்கி, அவர் குடும்பத்தை தூக்கி மனைவியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல பூனை வெளியே வந்து தான் ஆகணும். போட்டோவும் வெளியே வந்திடுச்சு. சேலத்துக்காரர்னு சொல்றாங்க... ஆனால் இதே சென்னையில் பெருங்களத்தூரில் தான் இருந்திருக்காரு. எல்லாரையும் போல மெரினா பீச்செல்லாம் வந்து சுண்டல் எல்லாம் சாப்பிட்டு போயிருக்காரு. ஆனால் ஏதோ ஐரோப்பாவில் இருக்கிற மாதிரி தான் பில்டப் இருந்துச்சு. இரண்டு ஆடி கார்கள், சொகுசு பங்களானு... மனுசன் வேறு வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. எல்லாம் உங்க பசங்களுக்கு நீங்க கொடுத்த பாக்கெட் மணி தான். எப்போதுமே தப்பு பண்றவன்... எவிடன்ஸை அவனுக்கே தெரியாமல் விட்டுவிட்டு போவான். இங்கேயும் அப்படி தான் நடந்துருக்கு. ‛மதன் யாருனு தெரியாது, அவர் முகமே தெரியாது...’ அதுவரை சரி... வீடியோ போடும் போது, அதில் பணியாற்றிய எல்லோருடைய பெயரையும் போட்டது தான், ’மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்த’ தருணம். மதன் யாருன்னு தெரியாம இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு உலகம் இருக்கும். அதில் அவங்களை எல்லாருக்கும் அடையாளம் தெரியும். அதை வெச்சு தான் மதனை போலீஸ் நெருங்கியிருக்கு. அதோட இணைய பயன்பாட்டிலும் ஏதோ விட்ட குறை, தொட்ட குறையை கொஞ்சம் விட்டுட்டு போயிருக்காப்ள. அதுவும் போலீசுக்கு ஹெல்ப் பண்ணிடுச்சு. இப்போ பப்ஜி மதன்... கப்சிப்னு இருக்காப்ள.




சொகுசு வாழ்க்கை!


அவருக்கே தெரிஞ்சிருக்கு, இந்த தொழில்ல வேறு ஆட்களை வெச்சா நாம சிக்கிடுவோம்னு. அதான் தன்னோட மனைவியை கூடவே வேலைக்கு வெச்சிருக்காரு. எல்லாம் கொஞ்ச காலம் என்பது அவருக்கு தெரியாமல் போயிருக்கலாம். இப்போ மனைவியை கைது பண்ணிட்டாங்க. மதனை புதனுக்குள் தூக்கனும்னு டேட் குறிச்சிட்டாங்க. முன் ஜாமீனுக்கு அப்ளை பண்ணிட்டு, ‛ஓட ஒட ஓட... தூரம் குறையலைனு...’ எங்கேயோ ஓடிட்டு இருக்காப்ள மதன். ஆனால் ஒன்று சாத்தியமாயிருக்கு. இந்த மோசமான தொழிலை வெச்சு  கோடிகளை அள்ளியிருக்கார். வழக்குகளை சந்திக்க அது அவருக்கு பலமா இருக்கும். இந்த வழக்கோட பரபரப்பும் அப்படியே இருக்கப் போறதில்லை. இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் வந்த வழக்கெல்லாம் என்ன ஆச்சோ... அதே நிலைமை தான் இதுக்கும் வரப்போகுது. கொஞ்ச நாள் பரபரப்பிற்கு பின்னாடி மதனை மறந்துடுவோம். அதுக்கு அப்புறும் கோபாலோ... கோதண்டமோ வந்து இந்த பரபரப்பை கையில் எடுத்துப்பாங்க. ஏற்கனவே வாங்குன பி.எம்.டபிள்யூ கார்ல மதன், ஜாலியா வாய்தாவுக்கு போவாரு. மதன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள். நாம தான் அவர்களிடம் இருந்து பாதுகாப்பா இருக்கனும்.




பெற்றோரே உஷார்!


ஒரு இடத்தில் ஆபாசம் கொப்பளிக்குதுனு தெரிந்தும் அங்கே போய் நின்னா, அது தெறிக்கத்தானே செய்யும். அதிலும் பெண்கள் அங்கே போறாங்கன்னா... இன்னும் டேஞ்சர். இணையம் நம் அறிவை இணைக்கவே, இழக்க அல்ல. பெற்றோர் பிள்ளைகள் கையில் மொபைல் போனை தந்து விட்டு , நமக்கு டார்ச்சர் இல்லை என ஒதுங்குவதால் தான், மதன்களிடம் அவர்கள் மாட்டுகிறார்கள். நீங்கள் ஒரு முறை அவர்களை திட்ட தயங்குவதால், மதன்களிடம் தினம் தினம் திட்டு வாங்குகிறார்கள். 150 யை தாண்டி மதன் மீது புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது. வழக்கு வலுவாகவே இருக்கும் என தெரிகிறது. கரன்சியை எண்ணிய மதன் , கம்பியை எண்ணுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மதன் தான் கெத்து என சுத்திட்டு இருந்த கூட்டம், இனியாவது ஆட்டத்தை முடித்து நாட்டத்தை படிப்பில் காட்டட்டும். மீண்டும் ஒரு முறை போலீஸ் நீதியை நிலை நாட்டட்டும்!