தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, சுவாமிமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளிக்கு சுவாமி மலை, அலவந்திபுரம், ஏராகரம், நாககுடி, திருவைகாவூர், அண்டக்குடி உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி கட்டிடம், ஒடு போட்ட வகுப்பறையில் மாணவர்கள் படித்து வந்தனர். அதன் பின்னர், 20 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிமெண்ட் கட்டிடமாக கட்டப்பட்டது.  இந்நிலையில் கட்டிடம் கட்டபப்ட்டு பல வருடங்கள் ஆனதால், கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது. வகுப்பறையில் மேற்கூரைகள், வகுப்பு அறைக்கு நடந்து செல்லும் பாதையின் மேற்கூரைகள் அனைத்து பெயர்ந்து, சிமெண்ட் காரை கீழே கொட்டுகின்றது.




இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருபாலரும் படித்து வருவதால், மாணவர்களுக்கு சுகாதார வளாகம் இல்லாததால், பள்ளி இடைவெளியில், பள்ளிக்கு அருகில் உள்ள ஒதுங்குபுறமான இடங்களில் தங்களது இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். சில மாணவர்கள், வெளியில் செல்வதற்கு வெட்கப்பட்டு கொண்டு, இயற்கை உபாதையை கழிக்காமல் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். பள்ளி நாட்களில் மாணவர்களின் நிலை மிகவும் வேதனையாகி விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தை தொடர்ந்து அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செயய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அவல நிலையை, தமிழக அரசுக்கு தெரியபடுத்தி, புதிய கட்டிடம் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து பெற்றோர் கூறுகையில், சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் அனைத்து மாணவர்களும் ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களாகும்.  நகரபகுதியான கும்பகோணத்திற்கு சென்று படிக்க வேண்டுமானால், பள்ளி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் ஆவதால், சுவாமிமலையில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களை படிக்க வைக்கின்றார்கள். இப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட பல வருடங்கள் ஆனதால் மேற்கூரைகள் பெயர்ந்து உள்ளே கம்பி கூடுகள் தெரிகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அப்போதே சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. அதிஷ்டவசமாக யாரும் பள்ளிக்கு வராததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.




மேலும், பள்ளி மாணவர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சுகாதார வளாகம் இல்லாததால், பள்ளிக்கு அருகிலுள்ள மறைவான பகுதிக்கு சென்று வருகின்றார்கள். இதனால் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம் வீசுவதால், வகுப்பறைக்குள் மாணவ, மாணவிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.