திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம் செய்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி தரிசனம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி தியாகராஜர் சுவாமி யதாஸ்தானத்தில் இருந்து ராஜநாராயண மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பது வழக்கம். இதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தந்து திருவாதிரை திருவிழா பாத தரிசனத்தை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காலை முதல் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜசுவாமி நேற்று இரவு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தியாகராஜசுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர் களுக்கும் பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும் தீபாரதனை நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்மன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் திருவாரூர் மாவட்டம் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் கொட்டும் பணியில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பாத தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பாத தரிசனத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று தியாகராஜர் சுவாமியை பாத தரிசனம் செய்து செல்கின்றனர். பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்