தஞ்சாவூர்: யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் கோடைகால வெயில் கொளுத்த ஆரம்பிக்கும் முன்பே வந்துட்டேன் அப்படின்னு தஞ்சையில் வந்து குவிந்துள்ளது தர்பூசணி பழங்கள்.


தற்போது வெயில் கொளுத்துவதால் தஞ்சைக்கு தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. தற்போதுதான் சீசன் என்பதால் ஒரு கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யபடுகிறது. இன்னும் வரத்து அதிகமானால் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


கோடைகாலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வருவதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் பழஜூஸ், கரும்புச்சாறு, குளிர்பானங்கள், கூழ் போன்றவற்றை வாங்கி அருந்தி வருகிறார்கள். இதில் கிலோ ரூ.25க்கு சத்து நிறைந்த தர்பூசணியை அதிகளவில் வாங்குகின்றனர். இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள். இருப்பினும் இதில் தர்பூசணிக்கே முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி பழத்தை சிறுவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சீசன் தொடங்கி இருப்பதால் தஞ்சைக்கு அதிக அளவில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக புதிய பஸ்ஸ்டாண்ட், பெரிய கோயில் பகுதி, மருத்துவக்கல்லூரி சாலை என்று தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தஞ்சைக்கு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ரெகுநாதபுரம், கீரனூர் உட்பட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வந்து குவிகின்றன. தஞ்சையில் சிவகங்கை பூங்கா, சீனிவாசபுரம், மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சை புறவழிச்சாலை பகுதிகளிலும் அதிக அளவில் தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் அதிகளவில் பழங்களை வாங்கி செல்கின்றனர். வரத்து அதிகமானால் விலையும் குறையும் என்கின்றனர் வியாபாரிகள்.


இதுகுறித்து பழ வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சையில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். இதில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளதால் வெயில் காலத்திற்கு ஏற்ற பழமாக உள்ளது. தற்போது கந்தர்வக்கோட்டை ரெகுநாதபுரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. வழக்கமாக தர்ப்பூசணி பழங்கள் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சாகுபடி தொடங்கப்பட்டு மாசி மாதம் முதலே அறுவடை தொடங்கி விடும்.


இங்கு தற்போது தர்ப்பூசணி பழங்கள் அறுவடை தொடங்கி உள்ளதால் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன. ஒரு லாரி தர்ப்பூசணி பழங்கள் ரூ.12 ஆயிரத்துக்கு வாங்கி வருகிறோம். அதனை எடுத்து வருவதற்கான செலவு, இறக்கு கூலி என ஒரு கிலோ பழம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் மக்களும் தர்ப்பூசணி பழங்களை அதிக அளவில் வாங்குகின்றனர் என்றனர்.