தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக வண்ணத் தொலைக்காட்சி பரிசளிக்கப்பட்டது. இந்த நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்குவதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாராட்டு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பெற்றமைக்காக மருத்துவமனைக்கு வரும் பயனாளிகளுக்கு பயன்படும் வகையில் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி மருத்துவர் முத்துக்குமாருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரவரிசை பட்டியல் மாநில அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. புறநோயாளிகள் வருகை உள்நோயாளிகள் அனுமதி பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர்இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக மற்றும் கருப்பை வாய் பரிசோதனை, கருத்தரித்தவுடன் 12 வாரத்திற்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின் போது 2.5 கிலோவிற்கு மேல் எடை இருத்தல்.
குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டதில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி 2024 மாதத்திற்கான தர வரிசை பட்டியலில் தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில் தொடர்ந்து நான்காவது முறையாக முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
மேலும் கரந்தை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மூன்றாம் இடமும் சீனிவாசபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இம்மருத்துவமனையில் 9691 உயர் இரத்த அழுத்த நோயாளிகள், 6604 சர்க்கரை நோயாளிகள், 12295 சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள், 45 மார்பக புற்றுநோயாளிகள், 66 கருப்பை வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சிறப்பான செயல்பாடுகளால் தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே தொடர்ந்து நான்காம் முறையாக முதலிடம் பெற்றமைக்காக பாராட்டி வண்ணத் தொலைக்காட்சி பெட்டி பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.