தஞ்சாவூர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசர் வெளியானது. அதில் வந்த காட்சிகள் அக்னி வெயில் போல் தமிழகத்தை சுட்டெரித்து வருகிறது. நடிகர் கமல் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினர் எரித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தஞ்சாவூரில் கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உருவபொம்மையை எரித்த 50 பேர் கைது செய்தனர்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசர் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் காஷ்மீர் மக்கள், சிறுவர்கள் உட்பட இந்திய ராணுவத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதைப் போலவும், தீவிரவாத செயலில் ஈடுபடுவதைப் போலவும், சிறுவர்கள் கல்லெறிந்து வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் மக்களின் தேசிய இன உரிமைக்காக நடத்தப்படும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் முத்திரை குத்தும் இழிவான செயலை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனையும் கண்டித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்தில் உருவ பொம்மையை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினர் எரித்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை ஆற்றுப்பாலத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினர் கமல், சிவகார்த்திகேயன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் துணை பொது செயலாளர் சுரேஷ், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட தலைவர் சேவியர், மாநகர செயலாளர் தமிழ் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் சாக்கோட்டை ராஜா, மகளிர் அணி பொருப்பாள்கள் செல்வி, சரோஜினி, ஜூலி, ராஜா, ஜெயசீலி பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் டீசர் கடந்த 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியானது.
அதில் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.