தஞ்சாவூர்: விடா முயற்சியும், விடாத திறமையும்தான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். எத்தனை படிக்கட்டுகள் ஏறுகிறோம் என்பது பற்றி கணக்கில்லாமல் வெற்றியை நோக்கி புலி போன்ற பாய்ச்சல் காட்டினால் வெற்றி என்ற இனிய கனியை பெற முடியும்.
கடினமாக உழைத்தவர்கள் தோல்வியை சந்தித்தாலும் வெற்றியை பெற்றே இருக்கின்றனர். கவனமும், நம்பிக்கையும், முயற்சியும், திறமையும் தோல்வி என்ற பெருங்கடல் சூழ்ந்து நின்றாலும் ஆழ்கடலில் உள்ள வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த நாள் வெற்றியின் திருநாளாக அமையும் அமைகிறது. உயர பறக்க இறக்கைகள் மட்டும் போதாது. ஒரே ஒரு லட்சியம் என்ற குறிக்கோளை அடையும் தன்னம்பிக்கை என்ற உறுதி இருக்க வேண்டும்.
அந்த உறுதியை மனதில் நிறுத்தி வானில் உயரே, உயரே பறக்கும் பருந்தாக இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
இப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து தங்கள் பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர். இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சுடர்வேந்தன் கிராமத்து போட்டோகிராபியில் மிக்க ஆர்வம் மிக்கவர். பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் நடந்த போட்டோகிராபி போட்டிகளில் முதல் இடம் பிடித்து அசத்தி உள்ளனர். இதுமட்டுமல்ல திருவள்ளூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டோகிராபியில் பங்கு பெற்று பாராட்டுக்களை பெற்றுள்ளார். 9ம் .மாணவி ரேகா தனி நபர் நடிப்பு போட்டியில் தனக்கென்று தனி பாதை அமைத்து பங்கேற்கும் போட்டிகளில் பாராட்டுக்களையும், வெற்றிகளையும் பெற்று வருகிறார்.
இந்த மாணவி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் தனிநபர் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்று சான்றிதழ், பரிசை பெற்றுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவில் போட்டியில் இப்பகுதியிலிருந்து பங்கு பெற்ற மாணவி என்ற பெருமைக்கும் உரியவர்.
கலை விழா போட்டிகளில் மாவட்ட அளவில் 12ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் போஸ்டர் மேக்கிங் வரைதல் வெற்றிப்பெற்றுள்ளார். இதேபோல் 12ம் வகுப்பு மாணவிகள் ஸ்ரேயா ஆங்கில கட்டுரை போட்டியிலும், நந்தனா தமிழ் கட்டுரை போட்டியிலும் வட்டார அளவில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வாகினர். மேலும் 12ம் வகுப்பு மாணவர் மகேஸ்வரன் கவிதை எழுதுதல், 11ம் வகுப்பு நகோமி கிராமிய நடனம், 12ம் வகுப்பு மாணவி சௌமியாII திருக்குறள் ஒப்புவித்தல், 9ம் வகுப்பு மாணவர் முகிலன் 3டி ஓவியம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.
இப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் சபரிநாதன் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். 10ம் வகுப்பு மாணவி தாரிகா பிற மாநில நாட்டியம், 9ம் வகுப்பு மாணவர் யுவராஜ் கிராமிய பாடல், 6ம் வகுப்பு மாணவி பொற்செல்வி களிமண் சிற்பம் செய்தல், 7ம் வகுப்பு மாணவர் குணபாலா கையெழுத்து தமிழ் போட்டி, ஆறாம் வகுப்பு மாணவி அமிர்தா கவிதை ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றுள்ளனர்.
6ம் வகுப்பு மாணவிகள் திவ்யஸ்ரீ ஆங்கில கையெழுத்து போட்டியிலும், அனுஷா கிராமிய பாடல், எட்டாம் வகுப்பு மாணவிகள் ரித்திகா, பேச்சுப்போட்டி, கிருத்திகா ஓவியப்போட்டியில் வட்டார அளவில் சிறப்பாக பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இந்தப் போட்டிகளுக்காக ஆசிரியை விக்டோரியா மற்றும் அனுசியா மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி கூறுகையில், ”எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று வருவது மிகவும் பெருமையாக உள்ளது. கல்வி மட்டுமின்றி தங்களின் தனிப்பட்ட தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர். கல்வி, போட்டி ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு சிறந்து விளங்குகின்றனர்” என்றார்.
மாணவ, மாணவிகளின் வெற்றியை ஆசிரியர்கள் ஆறுமுகம், அறிவொளி திருக்குமரன், மாதவி, சத்தியமூர்த்தி, தர்மராஜ், நித்யா, தவச்செல்வி, ஜோதி, தீபா, சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றிக் கொடி உயரே, உயரே பறந்து கொண்டே இருக்கிறது.