தமிழ்நாட்டில் இரண்டாவது அலை பரவலாக பரவியதையடுத்து, பொது மக்கள் பல்வேறு இடையூர்களுக்கு ஆளாகினர். கொரோனா தொற்று நோயை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. மக்களை காப்பாற்றும் விதமாக தடுப்பு ஊசிகள் செலுத்துவதற்கு முகாம் அமைத்து, வலியுறுத்தப்படுகிறது. இதனால் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகம், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிறது. கடந்த 29 ஆம் தேதி வரை 78 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 73346 பேர் பாதிக்கப்பட்டு, 71595 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்,வாகனஒட்டிகள், பாதசாரிகள், வணிக நிறுவனங்களில் உள்ளவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்துள்ளார்கள் என ஆய்வு செய்து, அபராதம் விதித்து, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தினந்தோறும் சுகாதாரத்துறையினர், தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும், காலை முதல் இரவு வரை கொரோனா தொற்று தடுப்பு குறித்தும், விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால், கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியை சேர்ந்த காவல் துறை எஸ்எஸ்ஐ ராஜ் (53) என்பவர் உயிரிழந்தார். இவர், தஞ்சாவூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு ராஜூக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தகுழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் சர்ஜெரி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாதங்களில் சிறுநீரக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
எஸ்எஸ்ஐ ராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், இதனை தொடர்ந்து அவருக்க உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு கடந்த செப்டம்பா் மாதம் 21 ஆம் தேதி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி பரிசோதனையில் ராஜூவிற்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருந்து வந்ததால், உடல் நிலை மேலும் மோசமானது. உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார். கொரோனா தொற்றால் இறந்த எஸ்எஸ்ஐ ராஜூக்கு, சண்முகப்பிரியா(50) என்ற மனைவியும், ஸ்ரீராம் (18) ஸ்ரீராகுல் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 6 பேர் போலீசார் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட காவல்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.