தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த அடை மழையினால் ஓரத்தநாடு வட்டம் சேதுராயன்குடிகாடு கிராமத்தில் அக்னியாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட வேதபுரிஸ்வரர் வாய்காலில் நீர் உடைப்பு ஏற்பட்டு சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் சூழ்ந்தது. இதனையறிந்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர், ஆய்வு செய்தார். அப்போது, வாய்க்கால் உடைந்த பகுதியை பார்வையிடுவதற்கு சாலை வசதி இல்லாமல், சேராக இருந்ததால், அங்குள்ள விவசாயி உடன் மொபட்டின் பின்புறம் அமர்ந்து சென்று பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளிடம் வௌ்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அக்னியாறு வடிநில கோட்டத்தின், கீழ் நீர் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து மணல் முட்டைகள் கொண்டும் மேலும் பாதிக்காத வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆழிவாய்கால் மற்றும் தென்னமநாடு சந்திப்பு பகுதியில் நஞ்சுகொண்டான் வாய்கால் பழுதடைந்த சிறுபாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அந்த வாய்க்காலை, பார்வையிட்டு உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் சீரமைப்புபணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். தென்னமநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வண்ணான் குளம் வடிகால் வாய்கால் தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இடம் ஆய்வு செய்யப்பட்டது. தென்னமநாடு வேதபுரிவாய்கால் ஆலத்தேரிமதகு கழங்கு பகுதியில் கதவணை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையளித்த நிலையில், அதற்குரிய இடத்தையும் ஆய்வு செய்யப்பட்டது. திருவோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெம்மேலி திப்பியகுடி கிராமத்தில் அக்னியாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட வேதபுரிஸ்வரர் வாய்காலில் நீர் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் நீர் சூழ்ந்துள்ள பகுதியை பார்வையிட்டு, விரைவில் பணிகள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பொது மக்களின் கோரிக்கையின் படி நெம்மேலி திப்பியகுடி சோழகன்குடிகாடு கிராமத்தினை இணைக்கும் தார்சாலை பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதிக்கான நடவடிக்கை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. நெம்மேலி திப்பியகுடி கிராமம் திப்பியகுடி சாலையிலிருந்து திருமேனியம்மன் கோவிலுக்கு புதியபாதை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்ததன் பேரில், ராமலிங்கம் வடிகால் நெடுகை 1.80 கி.மீசட்ரஸ் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு இடம் ஆய்வு செய்யப்பட்டது. பட்டுகோட்டை வட்டம் அண்டமிகண்ணனாறு குறுக்கே 53 கிலோ மீட்டர் தூரத்திற்கு 741.64 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைதுறை மற்றும் கிராம சாலைகள் கோட்டம் நபார்டு மூலம் கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் பொருட்டு உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இதே போல், சொக்கனாவூர், கண்ணனாறு தரைப்பாலம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது அக்னியாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் கனிமொழி, உதவி செயற்பொறியாளர் திலீபன், உதவி பொறியாளர்கள் அருண்கணேஷ், ஆனந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.