சீர்காழியில் நகராட்சி குப்பையை குடியிருப்பு பகுதியில் கொட்டுவதை கண்டித்து டிராக்டரை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. இதில் சீர்காழி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் குப்பைகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் ஒன்றிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான ஈசானிய தெருவில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குப்பை கிடங்கில் போதிய இட வசதி இல்லாததால் நகராட்சிக்கு சொந்தமான பிச்சைக்காரன் விடுதி தெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இந்த சூழலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிச்சைக்காரன் விடுதியில் குப்பை கொட்டப்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் விலை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பொதுமக்கள் நோய்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும் தெரிவித்து இங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ALSO READ | Premalatha Vijayakanth: ’பொருளாளர் - பொதுச்செயலாளர்’ பிரேமலதா விஜயகாந்த் அரசியல்வாதியான கதை..!
இதனை தொடர்ந்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 1 -ம் தேதி முதல் பிச்சைக்காரன் விடுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்ட கூடாது என நகராட்சி ஆணையர் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் பிச்சைக்காரன் விடுதி அருகே குப்பைகளை கொட்டுவதற்காக நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை ஏற்றி வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி வணிகர் அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில் டாக்டரை வழிமறித்து முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் போராட்டக்காரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குப்பை கொட்ட வந்த டிராக்டரை திருப்பி அனுப்பிவைத்து மேலும் பேச்சுவார்த்தையில் வரும் காலங்களில் பிச்சைக்காரன் விடுதியில் அருகே குப்பைகளை கொட்ட கூடாது எனவும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை விளக்கிக் கொண்டனர். இதனால் சீர்காழி - புளிச்சக்காடு சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.