தடகள வீராங்கனையாக இருந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று நினைத்த பிரேமலதா, விஜயகாந்தின் மனைவியாகி இன்று தேமுதிகவின் பொதுச்செயலாளராக மாறியிருக்கிறார்.


விஜயகாந்திற்கு பக்கபலமாக இருந்த பிரேமலதா


தனது ரசிகர் மன்றத்தை விஜயகாந்த், கட்சியாக மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் பிரேமலதா(Premalatha), ஆம்பூரில் பிறந்த பிரேமலதாவின் தந்தை கண்ணையா சர்க்கரை ஆலை ஒன்றியின் மேனேஜராக பணியாற்றியவர். தடகள போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரேமலதா, தேசிய அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றவர். அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு இளைய சகோதரனும் உண்டு. இளைய சகோதரன்- தான் இன்று தேமுதிகவின் துணைச் செயலாளராக இருக்கும் சுதீஷ்.



பெண் பார்க்க கடைசியாக சென்ற விஜயகாந்த்


பிரேமலதாவை முதலில் உறவினர்கள் எல்லாம் சென்று பெண் பார்த்து, பொருத்தமானவர் என சொல்ல, அதன்பிறகே விஜயகாந்த் பிரேமலதாவை பெண் பார்க்க சென்று ஒகே சொன்னார். இருவரது திருமணமும் மதுரையில் 1990ல் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் திரையுலகமே பங்கேற்று இருவரையும் வாழ்த்தியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்ற அந்த திருமணம் ஒரு திருவிழா போல நடந்து முடிந்தது. வந்தவர்கள் அனைவருக்கும் வயிறு புடைக்க அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. வயிறார உண்ட மக்கள், இருவரையும் மனதார வாழ்த்தினர்.


வீட்டை பார்க்கத் தொடங்கியவர், கட்சியை பணிக்கு திரும்பினார்


திருமண ஆன புதிதில் மற்ற பெண்களைபோல வீட்டை பார்த்துக்கொண்டிருந்த பிரேமலதா 1996ஆம் ஆண்டிற்கு பிறகு விஜயகாந்திற்கு உதவியாக அவருக்கு கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் கதை கேட்கத் தொடங்கினார். அதோடு, விஜயகாந்த் நடத்தும் நிறுவனங்களையும் நிர்வகிக்கத் தொடங்கினார். விஜயகாந்த் ரசிகர் மன்றம் அசுர வளர்ச்சி அடைந்ததற்கு பிரேமலதா செலுத்திய பங்கு மகத்தானது. கட்சிகளை போல பட்டித் தொட்டியெல்லாம் விஜயகாந்த் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. மன்றத்திற்கு என சின்னமும் கொடியும் கொண்டுவரப்பட்டது. தன்னுடைய படங்களில் எல்லாம் ரசிகர் மன்ற கொடியையும் சின்னத்தையும் திரைகளில் காண்பிக்கும் பழக்கத்தை கொண்டுவந்தார் விஜயகாந்த். அது அவரது ரசிகர்களுக்கு இன்னும் உத்வேகத்தை கொடுத்தது.


கட்சி தொடங்கவேண்டும் என்று எழுந்த குரல்கள்


காவிரி நீர் உரிமை பிரச்னையில் திரையுலகை கூட்டி சென்னையில் உண்ணாவிரதம் நடத்தியது உள்ளிட்ட தமிழக பிரச்னைகளில் விஜயகாந்த் குரல் கொடுக்கத் தொடங்கியதும் அவர் கட்சி தொடங்குவார் என்ற பேச்சுகள் எழுந்தன. பின்னர், பாபா திரைப்பட பிரச்னையின்போது பாமகவிற்கு விஜயகாந்திற்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. அப்போது விஜயகாந்த் கட்சியை தொடங்க வேண்டும் என்றும் அதுதான் அவரை சார்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று பிரேமலதாவிடம் முறையிட்டனர். அதன்பிறகு தான் விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார். இதற்கு பின்னணியிலும் பிரேமலதாவே அவருக்கு பக்கபலமாக நின்றார்.


பிறந்த மண்ணில் கட்சி தொடங்கிய விஜயகாந்த்


தன்னுடைய பிறந்த மண்ணான மதுரையில் 2005 செப்டெம்பர் 14ஆம் தேதி தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். அப்போது கட்சியில் உறுப்பினராக மட்டுமே இருந்த பிரேமலதாவிற்கு 13 வருடங்கள் கழித்தே அதாவது 2018ஆம் ஆண்டில்தான் பொருளாளர் பொறுப்பை கொடுத்தார் விஜயகாந்த்.  இடையில் 2006ல் விருத்தாசலத்தில் நின்று முதன்முதலாக விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆனார், பின்னர் 2011ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 2வது முறையாக வெற்றி பெற்ற விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடித்து சாதனை படைத்தார். இந்த வெற்றிகளுக்கெல்லாம் காரணமாக பிரேமலதாவே இருந்திருக்கிறார் என்று விஜயகாந்தே மேடைகளில் அவருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.


இடிக்கப்பட்ட விஜயகாந்த் மண்டபம்


2007ல் அவருக்கும் திமுகவிற்கு இடையே இருந்த உரசல்கள் உச்சத்தை அடைந்தன. திமுக ஆட்சியின்போது கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக இடித்து தள்ளப்பட்டது. நீதிமன்ற படிகளில் ஏறியும் அதற்கு விஜயகாந்தால் தடை வாங்க முடியவில்லை. அப்போது மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் இன்றைய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு. தன்னுடைய மண்டபத்தை திமுகவினர் திட்டமிட்டே இடிக்க வைத்தனர் என்று கோபத்தில் இருந்த விஜயகாந்த் அதன்காரணமாகவும் 2011ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று சொல்லிவந்தவரை ஜெயலலிதாவோடு இணக்கமாக வைத்து கூட்டணி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்தவரும் அவரது மனைவி பிரேமலதாதான்.


முடிவுகள் எடுத்த பிரேமலதா – ஒகே சொன்ன விஜயகாந்த்


2016ல் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜயகாந்தை முதல்வராக முன்னிறுத்த வைத்து மக்கள் நலக் கூட்டணியுடன் சேர வைத்தார் பிரேமலதா. ஆனால், இந்த உத்தி திமுகவை ஆட்சி வராமல் தடுக்க உதவியதே தவிர, தேமுதிகவிற்கோ மக்கள் நலக்கூட்டணிக்கோ எந்த பயனையும் அளிக்கவில்லை. தொடர்ந்து 2வது முறையாக அதிமுகவே ஆட்சியை பிடித்தது. விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரால் அன்றாட கட்சி பணிகளை பார்க்க முடியாமல் போன நிலையில், ஒட்டு மொத்த கட்சியையும் தன்னுடைய தம்பி சுதீஷ் உதவியுடன் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நடத்தத் தொடங்கினார் அவர்.


பிரேமலதா மீது புகார் சொன்ன நிர்வாகிகள்


ஆனால், தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் தேமுதிகவில் இருந்து ரயில் பெட்டிகள் தடம் புரள்வது மாதிரி அடுத்தடுத்து வெளியேறினர். அவர்கள் அனைவரும் தேமுதிகவில் இப்போது ஜனநாயகம் இல்லை. விஜயகாந்தை போல குறைகளை காதுகொடுத்து பிரேமலதா கேட்கமாட்டேன் என்று சர்வதிகாரமாக செயல்படுகிறார் என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.


முதல் தேர்தலில் தோல்வி முகம்


2021 சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி வைத்து விஜயகாந்தின் தொகுதியான விருத்தாசலத்தில் போட்டியிட்டார் பிரேமலதா. ஆனால், அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை.  ஆனால், விஜயகாந்த் அரசியலில் ஆழமாக கால் பதிக்கவும் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவி அமரவும் பாடுபட்டவர் பிரேமலதாதான். தேமுதிக தொண்டர்களால் அண்ணியார் என்று அழைக்கப்பட்ட பிரேமலதாவை பொருளாளர் ஆக்கினார் விஜயகாந்த். இப்போது, அவரை பொதுச்செயலாளர் ஆக்கியிருக்கிறது தேமுதிக பொதுக்குழு.


தேமுதிகவை மீண்டும் தலைநிமிர செய்வாரா பிரேமலதா


நாடாளுமன்ற கூட்டணி முடிவுகளை எடுக்க விஜயகாந்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேமுதிக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் உண்மையில் கூட்டணி முடிவுகளை எடுக்கப்போவது என்னவோ பொதுச்செயலாளர் ஆகியுள்ள பிரேமலதாதான். தொடர்ந்து சரிவையே சந்தித்து வரும் தேமுதிக-வை பிரேமலதா தலைநிமிர வைப்பாரா என்பதை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சொல்லிவிடும்.