மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெக்ஷிணாமூர்த்தி நகரில் சாலை போடுவதற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலமாக சாலையை பெயர்த்து எடுக்கும் பணியில் ஈடுபடுவதற்காக வந்துள்ளது. அப்போது அபிராமி நகர் பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக தங்கள் பகுதி சாலை குண்டும் குழியுமாக மழையால் சேதம் அடைந்து கேட்பாரற்று இருப்பதாகவும், சாலை போட சொல்லி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும், ஆனால் இது நாள்வரை சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
மேலும், தற்பொழுது தெக்ஷிணாமூர்த்தி நகரில் ஊராட்சி ஒன்றிய அதிகாரி வசிக்கும் வீட்டில் சாலை நல்ல நிலையில் உள்ளது என்றும், இருந்த போதிலும் அதனை தற்போது பெயர்த்து எடுத்து விட்டு மீண்டும் சாலை போடுவதாகவும் கூறி, இதனால் ஆத்திரமடைந்த அபிராமி நகர் பகுதி மக்கள் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தி பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி, பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் தெரிவித்து தங்கள் பகுதிக்கு சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை தெக்ஷிணாமூர்த்தி நகருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறாது என தெரிவித்ததன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சாலை போடும் பணியும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | Cow Hug Day: ”இடதுசாரி அரசை விட பசுக்கள் அதிக நன்மை செய்கின்றன”.. கேரள பாஜக தலைவரின் சர்ச்சை கருத்து..