தஞ்சாவூர் கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினருக்குப் ரகசிய புகார் வந்தது. இதனை அடுத்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.  பின்னர் ரேசன் அரிசியை கடத்தி வைத்திருப்பதாக உறுதி செய்தனர். இதனை தொடர்ந்த, அந்த வீட்டில் தஞ்சாவூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் அதே பகுதியை

  சேர்ந்த எம். வையாபுரி (63)  என்பவர்,  50 கிலோ எடை கொண்ட 69 மூட்டைகளில் 3,450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  அவர் ரேசன் கடைகள் மற்றும் பொது மக்களிடமும் ரேசன் அரிசியை வாங்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து, நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.  இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



இது குறித்து போலீசார் கூறுகையில்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் அரிசிகள், கோழி தீவணத்திற்காக அரைக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.  ஏழை மக்களுக்கான அரிசியை, ரேசன் கடை  அலுவலர்களிடம், கூடுதல் விலைக்கு வாங்கி, அரைத்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றார்கள். தற்போது கடத்தப்பட்ட ரேசன் அரிசி எந்த கடையில் வாங்கியது, ரேசன் கடை அலுவலர்கள் யார் என, தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேசன் அரிசி கடத்துவதற்கு முயற்சி செய்த லாரி மற்றும் பணியாளர்களை கைது செய்து விசாரித்து வருகின்றோம்.



பெரும்பாலான ரேசன் அரிசிகள், கிராமப்புறங்களிலிருந்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பொது மக்கள் தகவல் தெரிவித்தால், ரேசன் கடை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  பொது மக்கள், ரேசன் கடைகளில் அரிசி இல்லை என்று, அலுவலர்கள் கூறினால், உடனடியாக மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அப்போது அரிசி கடத்துவது குறித்து தகவல் தெரிய வரும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில், இனி வரும் நாட்களில் ரேசன் கடைகளில் அரிசி கடத்துவது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.