நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் சித்தர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் இவரது வீட்டின் அருகே இரண்டு ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரத்தில் திடீரென பால்போன்ற திரவம் நுரையுடன் பொங்கி வழிந்து வருகின்றது. இதனை சுவைத்துப்பார்த்தால், இனிப்புச்சுவையுடன் காணப்படுகின்றது.
இதனை கேள்விப்பட்ட சுற்றுப்பகுதி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பால் வருவதை பார்த்து, செல்கின்றனர் அப்பகுதி முதியவர்கள் கூறும் போது 50ஆண்டுகளுக்கு மேலான மரங்களில் பால்போன்ற திரவம் எப்போதாவது வடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளை மட்டுமே ஆன சிறிய மரத்தில் பால்வடிவது ஆச்சரியமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து தாவிரவியல் பேராசிரியர்கள் கூறுகையில், வேப்ப மரம் தாவர வகையைச் சேர்ந்தது. எனவே, தாவர இயல் படித்த அறிவியல் ஆசிரியரிடம் இதன் உண்மை என்ன என்று கேட்டு அறிய வேண்டும். சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம் எனவும். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.
பொதுவாக வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருந்தால், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைத்தான் பால்வடிகிறது என்கின்றனர். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லையென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை எனவும் கூறினர்.