இரு இடங்களில் பாலப் பணி தஞ்சாவூரில் மார்ச் 9 முதல் போக்குவரத்து மாற்றம்


தஞ்சை கல்லணை கால்வாய் மற்றும் வடவாற்றில் புதிதாக 6 கோடியில்  நான்கு பாலம் கட்டப்படுவதை முன்னிட்டு மாற்றுப்பாதையில் வாகனங்களை போக்குவரத்து இயக்குவது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.  தஞ்சை கரந்தை போக்குவரத்து கழக பணிமனை அருகே வடவாறு பாலம் உள்ளது. மிகவும் பழமையான இப்பாலம் குறுகலாகவும், சிதிலமடைந்து, இஸ்திரதன்மை குறைந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதே போல் தஞ்சை காந்திஜி சாலை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன் பாலமும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த பகுதியிலும் புதிய பாலம் கட்டப்படுகிறது. இந்த 2 இடங்களிலும் ரூ.6 கோடியில் கட்டப்படுகிறது.


கல்லணைக்கால்வாய் பகுதியில் 37 மீட்டர் நீளத்தில் 2 பாலமும், வடவாற்றில் 27 மீட்டர் நீளத்தில் 2 பாலமும் கட்டப்படுகிறது. என பாலங்கள் 4 வழிச்சாலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாலமும் தலா 1.5 கோடியில் கட்டப்படுகிறது. இந்தபாலத்தில் பொதுமக்கள் நடைபாதையும் அமைக்கப்படுகிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்படும் இந்த பாலப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் தொடங்கப்பட்டு 3 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாய் தஞ்சை நகரின் மையப்பகுதியிலும், வடவாறு பாலம் உள்ள சாலை தஞ்சை- கும்பகோணம் மெயின் சாலை என்பதால் போக்குவரத்து எப்போதும் நிறைந்து காணப்படும்.



தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, திருவையாறு, கும்பகோணம் மார்க்கமாக செல்லும் அனைத்தும் வாகனங்களும் சென்று வரும் பிரதான பாலமாக இருப்பதால், இரவு பகல் நேரங்களில் வாகனங்கள் சென்று வரும். இந்த வழியாக பாலம் கட்டப்படுவதால் போக்குவரத்துக்காக மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இதனை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து வருவாய் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


தஞ்சாவூர் மாநகரில் இரு இடங்களில் பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் மார்ச் 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்  கரந்தை வடவாறு மற்றும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே செல்லும் தற்போதுள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக இரு வழித்தட அகலம் கொண்ட இரு புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்படவுள்ளன. இதனை தொடர்ந்து கரந்தை வடவாறு பாலப் பணி நடைபெறுவதால், மார்ச் 9 ஆம் தேதி முதல் இவ்வழியாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. கும்பகோணம், திருவையாறு சாலையில் இருந்து வரும் நகரப் பேருந்துகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்கு வாசல், சிரேஸ் சத்திரம் சாலை, ஏ.ஒய்.ஏ. நாடார் சாலை வழியாகக் கொடிமரத்து மூலை வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும்.




சென்னை, அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து வரும் புறநகர் பேருந்துகள்,  கனரக வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை ரவுண்டானா, தாமரை, பெஸ்ட் பள்ளிகள், மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை வழியாகத் தொல்காப்பியர் சதுக்கம் வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும் கல்லணை  கால்வாய் ஆற்றுப் பாலத்திலும் (இர்வின் பாலம்) பணிகள் நடைபெறுவதால் மார்ச் 9 ஆம் தேதி முதல் காந்திஜி சாலையில் அண்ணா சிலையில் இருந்து இர்வின் பாலம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அனைத்து வாகனங்களும் பழைய நீதிமன்றச் சாலை, பெரியகோயில் சாலை, சோழன் சிலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து செல்ல வேண்டும். இப்பால பணிகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் வகையில் நடைபெறவுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்துக்கு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.