பெங்களூரில் இருந்து தஞ்சாவூருக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 75 லட்சம் மதிப்பிலான 1,750 கிலோ எடையுள்ள குட்காவை பறிமுதல் செய்து, மூன்று பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தஞ்சாவூர் சரக போலீஸ் டிஐஜி பிரவேஷ்குமார் டெல்டா மாவட்டங்களில், குட்கா விற்பனை மற்றும் கடத்தி வருவதை தடுக்க சிறப்பு தனிப்படை ஒன்றை அமைத்து கண்காணிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆர்.மகேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கந்தசாமி, கண்ணன், தலைமை காவலர் இளையராஜா, காவலர் சுந்தர்ராமன் அடங்கிய குழுவினர் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, காலை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் சந்தேகம்படும்படியாக நின்ற  கண்டெய்னர் லாரி மற்றும் மினி லாரி ஆகிய இருவாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது கண்டெய்னர் லாரியில் 125 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருந்தது. இதை அடுத்து அங்கிருந்த தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரையைச் சேர்ந்த தருமராஜ் மகன் ராஜ்குமார் (28), தஞ்சாவூர் ஞானம் நகர் வேதையன் மகன் அசோக்ராஜ் (31), சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்த் (24) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் பிடித்து கைது செய்தனர்.




மேலும், கண்டெய்னர் லாரியில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள 1,750 கிலோ எடையுள்ள குட்காவையும், இரு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்ததும் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேரில் சென்று பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை பார்வையிட்டும், குற்றவாளிகளை கைது செய்த தனிப்பிரிவு போலீஸாரையும் பாராட்டினர். 


பின்னர்  நிருபர்களிடம் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார் கூறுகையில், தஞ்சாவூர் காவல் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா நாளுக்கு நாள் அதிக விலைக்கும் ரகசியமாக கடைக்குள் வைத்து விற்பனை செய்யப்படுவதாக  கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்பிரிவு போலீஸார், தஞ்சாவூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.  இதே போல் கடந்த 15 நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு குட்கா கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




அதன் பேரில்,  பெங்களூரிவிலிருந்து தஞ்சாவூருக்கு கடத்தி வரப்பட்ட 75 லட்சம் மதிப்பிலான 1,750 கிலோ குட்காவையும், 40 லட்சம் மதிப்பிலான இரு வாகனங்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளோம். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.