திருவாரூர் மாவட்டத்தில் புதியதாக இன்று 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது

 

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில்  கொரோனா தொற்று வேகம் மிக அதிவேகமாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மூன்று மாதமாக கொரோனா தொற்று வேகம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் திருவாரூர் மாவட்டத்தில் 8 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவலாக பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அனைத்து மக்களும் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மேலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பொதுமக்கள் நடக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் புதியதாக ஒமைக்ரான் வைரஸை தடுக்கும் வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.



திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 41 ஆயிரத்து 915 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களே 41 ஆயிரத்து 376 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 79 நபர்கள் மட்டும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை 460 நபர்கள் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2368 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 8 நபர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவாரூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மேலும் நடமாடும் மருத்துவமனை என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

 

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி என்பது முக்கியமான ஒரு ஆயுதமாகும். மக்கள் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.