தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடைகள் கட்டப்பட்டு, பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக்கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசியமாக

  புகார்கள் வந்தன. இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக ஆய்வு செய்தனர். அப்போது, புதிய பேருந்து நிலைய முகப்பில் வலது புறமுள்ள டாஸ்மாக் மதுக்கடை, மதுக்கூடம் உள்பட 6 கடைகள் உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதில், மாதம் 12,000 ரூபாய் வாடகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கடைக்கு உள் வாடகை மூலம் மாதம் 40,000 ரூபாய் அளவுக்குச் சட்ட விரோதமாக வருவாய் ஈட்டி வருவது கண்டறியப்பட்டது.


இதையடுத்து, இக்கடைகளைக் காலி செய்யுமாறு உரிமதாரர்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் கூறினர். இதை எதிர்த்து உரிமதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தனர். ஆனால், இந்த வழக்கில் மாநகராட்சி நிர்வாகத்துக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைத்தது. இதை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் க. சரவணகுமார் முன்னிலையில், இந்த 6 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கையகப்படுத்தி, தங்களது பூட்டுகளைப் போட்டு பூட்டினர். பின்னர், இக்கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.




இதுகுறித்து மாநகராட்சி வருவாய் அலுவலர் எஸ். சங்கர வடிவேல் கூறுகையில், இந்த 6 கடைகளும் உள் வாடைக்கு விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கடைகளைப் பொறுப்பு எடுக்க வந்தபோது, தொடர்புடைய பழைய உரிமதாரர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது மாநகராட்சி வசம் பொறுப்பு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குறைந்தபட்ச வாடகையாக  4,090 ரூபாயும், அதிகபட்சமாக 12,500 ரூபாயும் இருந்தது. தற்போது, குறைந்தபட்சம் 24,500 ரூபாய்க்கும், அதிகபட்சமாக  51,000 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது என்றார் சங்கர வடிவேல்.




இதேபோல, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சுதர்சன சபா வளாகத்தில் உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளையும் மாநகராட்சி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதுதொடர்பாக 4 பழைய உரிமதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 4 கடைகளையும் மாநகராட்சி அலுவலர்கள் கையகப்படுத்தினர். மாநகராட்சி ஆணையரின் அதிரடி நடவடிக்கையால், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை வைத்திருக்கும் அனைத்து கட்சியினரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.


நாளை முதல் தரிசனம் கிடையாது என்பதால் பழனி கோயிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்