மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திரிவிக்கிரம நாராயணப் பெருமாள் என்னும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவர் தனது இடது பாதத்தை ஆகாயத்தை நோக்கி தூக்கியவாறு உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார். உற்சவர் தாடாளன்பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள்பாலித்து வருகிறார். 

Continues below advertisement




108 திவ்ய தேசங்களில் 23 வது திவ்ய தேசமான இக்கோயிலில் மூலவர்  திரு விக்ரம நாராயண பெருமாள் எனும் உலகளந்த பெருமாளின் வலது பாதத்தை ஆண்டுதோறும் ஏகாதசி தினத்தில் மட்டுமே பொதுமக்கள் தரிசனம் செய்ய முடியும். பெருமாளின் வலது பாதத்தின் அருகே ஓர் அடி உயரத்தில் தவிட்டு தாடாளன் எனும் விக்கிரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.  மூலவர் வலது பாதம் மற்றும் தவிட்டு  தாடாளன் பெருமாளை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிறவிப்பிணி  நீங்கும் என்பது ஐதீகம். 




இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில்  ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் தாடாளன்  பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டு, சாத்துமுறை நடந்தது. பின்னர் மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பெருமாள் சொர்க்க வாசல் அருகே எழுந்தருளினார் அங்கு சொர்க்க வாசலுக்கும், பெருமாளுக்கும் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் செய்யப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.




சொர்க்க வாசலின் வழியாக எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் பெருமாள் கோவிலை வலம் வந்து வசந்தமண்டபம் எழுந்து அருளினார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் உலகளந்த பெருமாளின் வலது பாத தரிசனம் கண்டு பிரார்த்தனை செய்தனர். பூஜைகளை பட்டாச்சாரியார்கள் பத்ரிநாத், பிரபு  செய்திருந்தனர். ஏற்பாடுகளை கோயில் ஆதீனம் கேகேசி சீனுவாச சுவாமி செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.




இதேபோல் மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்றது. பரிமளரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 வதுமான இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 




இதை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.