டிடிவி.தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே.கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாத துளசி ஐயாவுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமண வரவேற்பு விழா, பூண்டி கல்லுாரி வளாகத்தில்  நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். பின்னர் மதியம் 12 மணிக்கு கிளம்பி பூண்டிக்கு சென்றார். செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் அருகே வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களை பார்த்து, காரை விட்டு இறங்கி, வரப்புகளில் வழியாக சென்று, விவசாய பணியில் இருந்த கூலி விவசாய பெண்களிடம் சென்று சாகுபடி பற்றியில், எந்த பருவம், கடந்த சாகுபடி விளைச்சல் நன்றாக இருந்ததா என்றும் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா என விசாரித்து, அவர்களுக்கு சால்வைகளை வழங்கி, விவசாய தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.




பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பூண்டிக்கு சென்று திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வந்தார். சில  நிமிடங்கள் மட்டும் மேடையில் நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு, உணவு கூடத்திற்கு சென்று, பின்புறம் வழியாக  மீண்டும் புறப்பட்டு தஞ்சாவூருக்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக, திருமண வரவேற்பு விழாவில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திருச்சி எம்பி திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.




இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். மேடைக்கு வந்த ராஜாவை, டிடிவி தினகரன் வரவேற்றார். சில மணித்துளிகள் மட்டும் ஒ.ராஜாவும், டிடிவி.தினகரனை சந்தித்து பேசினார். கடந்த இரு நாட்களாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா - டிடிவி.தினகரன் சந்திப்பு என்பது அதிமுக-அமமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




 இது குறித்து அமமுகவினர் கூறுகையில்,


ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து பேசி வருகின்றார். டிடிவி தினகரனும், ஒ.பன்னீர்செல்வம் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்றார். இதனை தொடர்ந்து ஒ.ராஜா, வரவேற்பு விழாவிற்கு வந்தது. அதிமுகவை, சசிகலா கைப்பற்றுவது உறுதியாகி விட்டது. அதனால் அமமுகவின் உற்சாகமாகி உள்ளனர். தஞ்சாவூரில் தங்கியுள்ள சசிகலா, மதுரைக்கு சென்று விட்டு, மீண்டும் தஞ்சாவூரிலேயே தீபாவளி பண்டிகை வரை தங்குவார் என தெரிகிறது.  தஞ்சாவூரில் 1 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் சசிகலா கலந்து கொண்டு, முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என கூறப்படுகிறது என்றனர்.


திருமண வரவேற்பு விழாவிற்கு பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் அனைத்து செலவுகளை செய்தார். ஆனால் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், அமமுக கொடியை தஞ்சாவூர் முதல் பூண்டி வரையில் சாலையில் ஒரங்களில் கட்டியும், பிளக்ஸ் தட்டி வைத்திருந்தனர். இதனையறிந்த கிருஷ்ணசாமி வாண்டையார், அனைத்து செலவுகளையும் நான் செய்துள்ளேன், ஆனால், டிடிவி தினகரன் தான் செலவு செய்கிறார் என பேசுகிறார்கள் என வேதனைப்பட்டதாக என கூறப்படுகிறது.