மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக சுமார் 1289 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது.இதில் ஸ்மார்ட் சிட்டியாகும் நகரப்பகுதியில் குடிநீர், வடிகால், பழமையான குளங்கள், நீர் நிலைகள், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், ரோடு வசதிகள், சரித்திர புகழ்வாய்ந்த இடங்கள், அரண்மனை மற்றும் புராதன கட்டிடங்கள் இருப்பதால், அதனை பழைய மாறாமல் அப்படி பழைய நிலையைும் மாற்றாமல், நவீன முறையில் மாற்றி முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றுவது தான் ஸ்மார்ட் சிட்டியாகும்.புராதன நகரமான தஞ்சையில் நீராதாரத்துக்காக மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல ஆக்கிரமிப்பு காரணமாகப் படிப்படியாக மறைந்தன. தஞ்சை நகரை ஆண்ட மன்னர்கள், காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக, பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும்.




தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளம், அய்யன் குளம், சாமந்தன் குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினான் பாண்டிய மன்னன் வல்லபன், என்ற மன்னனுக்கு சேனாதிபதியாய் இருந்த சாமந்தன்  என்பவன். தஞ்சை நகரில்  சாமந்த நாராயண விண்ணகரம்  என்ற பெருமாள் கோயிலை நிறுவி, அந்த கோயிலுக்கு சாமந்த நாராயண குளம்  என்ற குளம் ஒன்றை வெட்டினான். பின்னர், அங்கு ஒரு புதுக்குடியிருப்பையும் தோற்றுவிக்கிறான் சாமந்தன். அப்படி அவன் தோற்றுவித்த குடியுருப்பு மெல்ல மெல்ல வளர்ந்து நாயக்கர்கள், மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என பயணித்து இன்று தஞ்சை மாநகராய் வளர்ந்துள்ளது.




தஞ்சையில் புதுக் குடியிருப்பு வரக் காரணாமாய் இருந்த கோயில் கீழ வாசல் பகுதியில் கீழை நரசிம்மர்  என்ற பெயரில் இன்றும் உள்ளது. கோயிலின் எதிரில் பெரிய குளமும் உள்ளது. தஞ்சை செல்லும் போது பெரிய கோயிலை மட்டும் பார்த்து விட்டு திரும்பாமல் வரலாற்றை தேடி பயணியுங்கள்.  தஞ்சாவூர் மாநகருக்கு தண்ணீர் பிரச்சனையை போக்கும் பல்வேறு குளங்களில் சாமந்தன் குளமும் ஒன்றாகும்.இக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டும், மைதானமாகவும், சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் நிலையில் சாமந்தன் குளமாக காட்சியளித்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், தற்போது, சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாமந்தன் குளம் சீரமைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ளது.




தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம் கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்று, தொடர்ந்து சென்று சாமந்தன் குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. குளத்தின்  மேல்புறத்தில்  படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் அழங்கார மின்விளக்குகள், நடுவில் நீராழி மண்டபம், அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள், பொது மக்கள் குளத்தில் பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்காக, குளத்தை சுற்றிலும், சில்வரினால் குழாய்கள், திருக்குறள், அதன் தலைப்புகள், வேளாண்மை தொடர்பான படங்கள், பழங்காலத்து விவசாய காட்சிகள், பல்வேறு வண்ணங்களில் கண் கவரும் வகையிலும், நவீன வர்ணம் மூலம் ஒவியமாக வரைந்துள்ளனர்.