திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குமட்டித்திடல் ஊராட்சி புத்தகரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒருசிலர் ஒன்றிணைந்து எல்லோரையும் போல கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் வழக்கம் போல் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புத்தகரம் கிராமத்தை சேர்ந்த தங்கராசு என்பவரின் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சிறுவனுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். இதனை அறிந்த வாட்ஸ்அப் குழு நண்பர்கள் சிறுவனுக்கு உதவி செய்ய முன்வந்தனர். வாட்ஸ்அப் குழுவில் இருந்த புத்தகரம் கிராம இளைஞர்கள், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் தங்களால் முடிந்த பணத்தை சிறுவனின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த சிறுவன் படிப்படியாக குணமடைந்து தற்போது நல்ல நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் அளவிற்கு குணமடைந்துள்ளார்.
நண்பர்கள் முயற்சியால் ஒரு ஏழை சிறுவனின் நோய் குணமடைய இவர்கள் செய்த உதவி இவர்களுக்கு பெரும் உந்து சக்தியாக அமைந்தது. இதனால் ஊக்கம் பெற்ற இளைஞர்கள் கடந்த பல ஆண்டுகளாக புத்தகரம் வடக்கு தெரு பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் தார் சாலை சீராமைக்கபடாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்து. இதனால் இப்பகுதிக்கு பள்ளி கல்லூரி வாகனங்கள் வருவதில்லை. பள்ளி செல்லும் பிள்ளைகளும், கற்பினி பெண்களும் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகினர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை செப்பனிட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சாலை சீரமைப்பு பணிகளை அரசுதான் சீரமைக்க வேண்டும் என ஒதுங்கிவிடாமல் நம் கிராமத்தை நாம் தான் சீர் செய்ய வேண்டும் என நினைத்து முதற்கட்டமாக 650 மீட்டர் தூரத்திற்கு ஜே.சி.பி மற்றும் ரோட் ரோலர் உதவியுடன் குண்டும் குழியுமான பழைய சாலை அகற்றப்பட்டு கற்கள் செம்மண் கொண்டு தற்போது சாலை செப்பணிடபட்டு வருகிறது. அதன் படி புத்தகரம் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இக்கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இளைஞர்கள் சிறுக சிறுக சேமித்து அனுப்பிய பணத்தை கொண்டு சாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கினர். கிராமத்து இளைஞர்களின் முயற்சியை கவனித்த அப்பகுதி பெண்கள் தாங்களும் இளைஞர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்கிறோம் என கூறி சம்பளம் இன்றி சாலை சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
இளைஞர்களின் இந்த பெரும் முயற்சிக்கு இப்பகுதி ஊராட்சிமன்ற தலைவரும் தந்த ஒத்துழைப்பால் தற்போது இந்த புதிய சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இப்பகுதி இளைஞர்கள் கிராம மக்கள் கொடுத்த தொகையை கொண்டு 650 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே சாலை அமைப்பதற்கான வேலைகளை செய்ய முடியும் என்றும் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்க தமிழக அரசு தான் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது புத்தகரம் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. புத்தகரம் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டு கொட்டகையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மழைகாலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் சென்று வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். எனவே புத்தகரம் வடக்கு தெரு சாலையை 3 கிலோ மீட்டர் தூரம் வரை முழுமையாக சீரமைத்து சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கிராம மக்கள் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இளைஞர்கள் அரசு உதவிசெய்யும் வரை தங்களால் முடிந்த பணத்தை சேமித்து எங்கள் பகுதியின் தேவைகளை நாங்களே நிறைவேற்றிக் கொள்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.