கர்நாடக மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீரானது திருச்சி முக்கொம்பு வழியாக கல்லணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் தில் திறக்கப்பட்ட நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் படிப்படியாக உயர்ந்து, இந்த கிராமங்களில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதி வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர். மேலும் கிராமங்களில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ள நீர் செல்வதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீரை கடந்தும் படகுகள் மூலமும் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியேறி ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
HBD Jyothika: தமிழ் சினிமாவின் ‘பொன்மகள்’...நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள் இன்று..!
மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் படகுகள் மூலம் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 5 முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இக்கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இன்னும் 5 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்கள் வீடு உடமைகளை விட்டு மக்கள் நிவாரணம் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கொள்ளிட ஆற்று கரையில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் 25 ஆயிரம் மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள் உள்ளிட்டவைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.