90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோயினும் இன்றளவும் அனைவரின் பெரு மரியாதையையும் பெற்ற நடிகை ஜோதிகா ஒன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
வாரி கொடுத்த வாலி
1990களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நக்மாவின் தங்கை என்ற அடையாளத்தோடு 1998 ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார் ஜோதிகா. அவரை 1999 ஆம் ஆண்டு கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார் எஸ்.ஜே,சூர்யா. கெளரவத் தோற்றத்தில் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படம் தான் அவருக்கு முதல் தமிழ் அறிமுகம். ஆனால் அதே ஆண்டில் ஹீரோயினாக அறிமுகமான படம் ”பூவெல்லாம் கேட்டுப்பார்”. இப்படத்தில் தந்து க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு ஜோதிகாவுக்கான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் மட்டும் விஜய்யுடன் குஷி, அஜித்துடன் முகவரி, கமலுடன் தெனாலி, அர்ஜூனுடன் ரிதம், சூர்யாவுடன் உயிரிலே கலந்தது, தன்னை அறிமுகம் செய்த பிரியதர்ஷன் இயக்கத்தில் சிநேகிதியே என நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றதோடு நடிப்பு திறமையை வெளிப்படுத்திய ஜோதிகாவுக்கென ரசிகர் கூட்டத்தைப் பெற்று தந்தது. இதில் குஷி படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
கதாபாத்திர ராணி
எந்த கேரக்டர் கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்து காட்டினார் ஜோதிகா. அதற்கு அச்சாரம் போட்டது “டும் டும் டும்” படம். இதில் பக்கா கிராமத்து பொண்ணாக அசத்தியிருப்பார். ஜோதிகா காலத்தில் சம போட்டியாளராக திகழ்ந்த சிம்ரனுடன் 12பி படத்தில் நடித்தார். விக்ரம் நடித்த தூள்,அருள், சூர்யாவின் காக்க காக்க,பேரழகன், விஜய்யுடன் திருமலை, சிம்புவுடன் மன்மதன், மாதவனுடன் பிரியமான தோழி என கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்த ஜோதிகாவுக்கு தனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டாக 2005 அமைந்தது.
சந்திரமுகியாக மாறிய ஜோதிகா
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படம் இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் டாப் 10ல் இருக்கும் படம். இந்த படத்தில் ஸ்ப்லிட் பர்சனாலிடி என்னும் உளவியல் பிரச்சனையை சந்திக்கும் பெண்ணாக அசத்தியிருந்தார். நாட்டியக்காரி சந்திரமுகியாக தன்னை கற்பனை செய்துகொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு முகபாவனைகளும் கச்சிதமாக கேரக்டரோடு பொருந்தி போனது. ஜோதிகாவின் நடிப்புக்கு அது ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். பின் சரவணா, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல் என ஒரு பக்கம் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் தன் கேரக்டருக்கு சவால் விடும் கதையையும் விட்டுவைக்காமல் இருந்தார். அதில் ஒன்று பேசும் திறனற்ற பெண்ணாக நடித்த மொழி, மற்றொன்று எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படங்கள்.
கோலிவுட்டின் லவ் ஜோடி
தனது சினிமா கேரியரில் சூர்யாவுடன் தான் ஜோதிகா அதிகப்படங்களில் நடித்திருந்தார். காக்க காக்க படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அஜித்-ஷாலினிக்குப் பிறகு கோலிவுட்டில் நட்சத்திர லவ் ஜோடியாக கொண்டாடப்பட்டது சூர்யா - ஜோதிகா தான். கிட்டதட்ட 6 படங்களில் இருவரும் ஜோடியாக நடித்த நிலையில் 2007 ஆம் ஆண்டு தமிழகமே தங்கள் வீட்டு விஷேசமாக கொண்டாடும் அளவுக்கு சூர்யா - ஜோதிகா திருமணம் நடந்தது. அதன்பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த தம்பதியினருக்கு தேவ், தியா என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு தம்பதியினர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஜோடி ரசிகர்களால் இன்றளவும் கைகாட்டப்படும் அளவுக்கு அந்த அன்பு அளப்பறியது.
கம்பேக் கொடுத்த ஜோ
கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் ஜோதிகா மீண்டும் நடிக்க தயாரானார். இம்முறை மலையாளப்படமான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே மூலம் ஒரு சூப்பரான கம்பேக் கொடுத்தார். பாலா இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், ராதாமோகனின் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என இன்றைக்கும் தான் மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் ஜோதிகா. அதேசமயம் திரையுலகில் ஒருவரின் செகண்ட் இன்னிங்ஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும் சொல்லாமல் சொல்லியுள்ளார். அவரின் 50வது படமாக உடன்பிறப்பே அமைந்தது.
இயக்குநர்களின் ஹீரோயின்
பேரழகன், சந்திரமுகி, மொழி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான மூன்று முறை தமிழக அரசின் விருதை வென்ற ஜோதிகா எப்போதும் இயக்குநர்களின் பேவரைட்டாக இருந்துள்ளார். அதனால் பல இயக்குநர்களும் தங்களுடைய படங்களில் மீண்டும் மீண்டும் ஜோதிகாவை நடிக்க வைத்தனர். ஜோதிகா திரையுலகில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி புதிய உச்சங்களை தொட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ..!