பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை மையமாக கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை உடைக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கும்பல் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையில் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஞ் பவானா உள்ளிட்ட பல அமைப்பு மற்றும் கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 12 ம் தேதி 50 இடங்களில் சோதனை :
முன்னதாக செப்டம்பர் 12 ஆம் தேதி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி என்சிஆர் ஆகிய இடங்களில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையை எடுத்துக் கொண்டு இந்த சோதனைகளை நடத்தியது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில பயங்கரவாதிகள் நாட்டில் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கும்பல்களை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு இடையேயான தொடர்பால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன என்பதும் என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து என்ஐஏ தெரிவிக்கையில், “ பல கும்பல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவிலிருந்து தப்பித்து பாகிஸ்தான், கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.” என தெரிவித்திருந்தனர்.
இந்த பயங்கரவாத கும்பல்களை அகற்றும் விதமாக என்ஐஏ கடந்த மாதம் ஃபாசில்கா, ஃபேர்ட்கோட், முக்த்சர் சஹாப், மோகா, தரன் தாரன், அமிர்தசரஸ், லூதியானா, சண்டிகர், பஞ்சாபின் மொஹாலி மாவட்டங்கள், கிழக்கு குருகிராம், பிவானி, ஹரியானாவின் யமுனா நகர், சோனேப மற்றும் ஜஜ்ஜார் மாவட்டங்கள், ராஜஸ்தானின் ஹனுமன்கர் மற்றும் கங்காநகர் மாவட்டங்கள்மற்றும் துவாரகா, வெளி வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மற்றும் டெல்லி / என்சிஆர் இன் ஷாஹ்தாரா மாவட்டங்கள் ஆகிய 50 இடங்களில் சோதனை நடத்தியது