மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சித்தர்க்காடு பகுதியில் அரசு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கான அரிசி, பருப்பு மற்றும் பல பொருட்கள் சேமித்து பாதுகாக்கப்படுகிறது. அரிசி மூட்டைகளை அடுக்கிவைக்கும் போது அவற்றை எலிகள் மற்றும் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கான மருந்துகள் அட்டியலுக்கு அடிபகுதி, சுற்றுப்பகுதிகளில் போடுவது வழக்கம். மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளுக்கு  அனுப்பியபிறகு தரையில் சிந்தி வீணாகும் அரிசிகளை கூட்டி தொழிலாளர்கள் கிடங்கிற்கு பின்புறம் உள்ள பழங்காவிரி வாய்க்கால் கரையில் கொட்டி வருகின்றனர். 




தரையில் சிந்தி சேதமடைந்த அரிசிகள் மாசுப்படுவதொடு, பூச்சி பிடிக்காமல் இருப்பதற்கான மருந்துகள் அதில் கலந்து இருப்பதால் அந்த அரிசிகளை வாய்க்கால் கரைகளில் கொட்டும்போது மயில் உள்ளிட்ட பறவைகள் தின்று இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாப்படுகை அண்ணாநகரை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவரின் இரண்டு கருவுற்ற பசுமாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது பழங்காவிரி ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு, கரையில் கிடந்த அரிசியை திண்றுள்ளது. இதனால் செரிமான கோளாறு ஏற்பட்டு இரண்டு மாடுகளுக்கும்  உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 




அதனைத் தொடர்ந்து பாப்பாத்தி அம்மாள் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து மாடுகளுக்கு  சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. பாப்பாத்தி அம்மாள் இந்த மாடுகளை கொண்டுதான் குடும்பத்தை நடத்திவந்துள்ளார். இதனால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இறந்த பசுமாடுகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் மயில் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்து கிடந்ததற்கு, வாய்க்கால் கரைகளில் கொட்டிய சேதமடைந்த அரிசிகளை அவைகள் உண்டதுதான் காரணம் என கூறும் அப்பகுதி மக்கள் இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 




குத்தாலம் அரசு கலைக்கல்லூரிக்கு அடிப்படை வசதி, நிரந்தர கட்டடம் கோரி 80 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாதிரி மங்கலத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 500 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்லூரிக்கு என்று தனி கட்டிடம் இல்லாததால் வட்டார சேவை மையத்தில் இயங்கும் வகுப்புகள் சிறிய கட்டிடம் மற்றும் இட வசதி இல்லாத காரணத்தால் சுழற்சி முறையில் மூன்று பிரிவுகளாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 




இந்நிலையில் அடிப்படை வசதி இல்லாத இக்கல்லூரியில் கழிப்பிட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தியும் மாணவர்கள் கடந்த மாதம் முதல் சாலை மறியல் போராட்டம், உள்ளிருப்பு போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மணிபாரதி உள்ளிட்ட மூன்று மாணவர்கள் வரும் 20 -ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறாக பேசிய கல்லூரி முதல்வரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  




அதனை தொடர்ந்து மாணவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் 13 -ஆம் தேதிக்குள் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், மாற்று ஏற்பாடு செய்து தரப்படாத காரணத்தால் இன்று கல்லூரியின் முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி தலைமையில் 80 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும், மாணவர்களின் நலனின் அக்கறை இல்லாத  கல்லூரியின் முதல்வரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.