தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் பாலாலய யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் தொன்மையானது. தஞ்சாவூரில் தஞ்சகன் என்கிற அசுரனை எதிர்த்துப் போர் புரிவதற்கு முன்பாக சிவபெருமான் எட்டுத் திசைகளிலும் சக்திகளை நிறுவினார். திசைக்கு ஒரு சக்தி எனும் விதத்தில், எட்டு சக்திகளை நிறுவினார் சிவபெருமான். அவ்வாறு அவர் நிறுவிய அந்த சக்திகளில் கிழக்கு திசைக்கான சக்திதான் புன்னை நல்லூர் மாரியம்மன்.
மிகத் தொன்மையான காலத்திலேயே சிவபெருமான் திருவருளால் இத்தலத்திற்குச் சக்தி வந்துவிட்டார் என்றாலும், இந்த அம்மன் வழிபாட்டிற்கு வந்த காலகட்டம் கிபி 1680 ஆகும். அந்த ஆண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான வெங்கிஜி மஹராஜ் சத்ரபதி என்பவர். சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற வேளையில் அவர் கனவிலே அந்த சமயபுரம் மாரியம்மன் தோன்றி புன்னை மரங்கள் நடுவிலேயே தான் இருப்பதாகக் கூறி அவ்விடத்திலேயே தனக்குக் கோயில் கட்டுமாறு ஆணையிட்டார். அப்போது அங்கே அம்மன் புற்று வடிவிலிருந்தார்.
ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் என்கிற மகானோடு, வெங்கோஜி மகாராஜா நெருக்கமாக இருந்தார். புன்னை நல்லூர் மாரியம்மன் திருவடிவம் வரக் காரணமாக இருந்தவர். அந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் எனும் மகான்.
ஆதியிலே வெள்ளை பற்றாக இருந்த மாரியம்மனை மந்திர எந்திரங்களை நிறுவி மாரியம்மன் திருக்கோலம் கொள்ளச் செய்தார் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர். கோடைக்காலத்தில் இந்த புன்னை நல்லூர் மாரியம்மன் முகத்திலிருந்து வியர்வை வெளிப்படுகிறது. முத்துக்களைப் போன்ற வியர்வை வருகின்ற காரணத்தால் இவருக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் என்கிற திருப்பெயர் உள்ளது.
பொதுவாக இவரை மாரியம்மன் என்று அழைக்கிறார்கள் பக்தர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து அம்மனை வழிபடுவது சிறப்பாகும். ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் மிகவும் சிறப்பானவை. புன்னைநல்லூரில் புற்று மண்ணால் உருவான மாரியம்மனுக்கு, மராட்டிய மன்னர்கள் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. அதிலிருந்து இக்கோயில் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆவணிப் பெருந்திருவிழா கொண்டாடப்படும். இந்நிலையில் இக்கோயில் கடந்த 2004ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு, 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, குடமுழுக்க நடத்திட கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது.
இதையொட்டி புதன்கிழமை மாலை பாலாலயத்துக்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள், மண்டபங்கள், தரை தளம் உள்ளிட்ட கோயிலின் பல்வேறு இடங்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்