தஞ்சாவூர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மீண்டும் அமைக்கப்படும் மீன் சந்தையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் இரவு பாதையில் கட்டைகளைப் போட்டு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சந்தைகளைப் பிரித்து அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் இயங்கி வரும் மீன் சந்தையைக் கரந்தையில் காலியாகவுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்நிலையத்தில் இரு மீன் லாரிகள் உள்ளே சென்றன. 




இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நிலையத்துக்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்து, மூன்றாவதாக வந்த மீன் லாரியை மறித்து, பாதையில் கட்டைகளைப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த முறை இங்கு தற்காலிக மீன் சந்தை அமைக்கப்பட்டபோது, கழிவு நீர் தேங்கியும், மீன் கழிவுகள் கொட்டப்பட்டும் அகற்றப்படாமல் தேங்கிக் கிடந்ததால், துர்நாற்றம், சுகாதாரச் சீர்கேடு, நோய்த் தாக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், அதனால், இந்த முறை இங்குத் தற்காலிக மீன் சந்தை அமைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர். தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திங்கள்கிழமை கலந்து பேசி முடிவு செய்யலாம் என அலுவலர்கள் கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.




இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,மீன் மார்கெட் இப்பகுதியில் அமைத்தால் சுகாதார சீர்கேடுகள் பரவும். கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வந்தால், அவர்களால் மேலும் கொரோனா தொற்று பரவும். மீன் மார்கெட்கழிவு நீர்களை முறையான வகையில் வெளியேற்ற வசதிகள் இல்லாததால், கழிவு நீர்கள் தேங்கி விடும். இதனால் கொசுக்கள் மண்டி, பல்வேறு நோய்கள் உருவாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீன் மார்கெட் அமைக்கப்பட்ட போது, எந்த விதமான பணிகள் நடைபெறாததால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து நகராட்சிஅதிகாரிகளிடம் புகாரளித்த போது, எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து விட்டனர். மேலும் இப்பகுதியை சுற்றிலும் மிகவும் ஏழ்மையான அடித்தட்டு மக்கள் வசித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக மீன்மார்கெட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், தவறும் பட்சத்தில் மீன் மார்கெட் அமைக்காதவாறு போராட்டம் தொடரும் என்றனர்.