தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக் கோட்டை சாலையில் முறையான தெரு மின் விளக்குகள் வசதி அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் இப்பகுதி வழியாக செல்லும் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகரம் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதிதாக சாலைகள், நடைபாதைகள், வடிகால் வசதி, ஆங்காங்கே ரெட் சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதற்கான பல பணிகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவுபடுத்தப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் முக்கியமான சாலையாக விளங்குகிறது. நாஞ்சிக்கோட்டை சாலையானது பைபாஸ், ஈபி காலனி, கருணாநிதி நகர், ஆவின் பால் பண்ணை, பர்வீன், அண்ணாநகர், உழவர் சந்தை, கல்லுக்குளம், மேரீஸ் கார்னர், கான்வென்ட், ரயிலடி, ஆற்றுப்பாலம், பழைய பேருந்து நிலையம் வரை 12 பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.
தஞ்சையின் மிக முக்கிய பகுதியாகவும், பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பரபரப்பான சாலையாகவும் இருந்து வருகிறது. இரவு 11 மணி வரையிலும் இந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுமட். இந்நிலையில் நாஞ்சிக்கோட்டை பைபாஸ், கருணாவதி நகர்,ஈ.பி காலனி, ஆவின் பால் பண்ணை, பர்வின் வரை சுமார் 3.கி.மீ தூரத்திற்கு முறையான மின் விளக்கு வசதி அமைக்கப்படாமலே இருக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பலமுறை இதன் காரணமாக விபத்துகளும் நடந்துள்ளது என அப்பகுதி சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், இந்த நாஞ்சிக்கோட்டை சாலை எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். இரவு நேரத்தில் லாரிகள், வியாபார பொருட்கள் ஏற்றிய வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என்று ஆயிரக்கணக்கில் சென்று வருகிறது. முறையான விளக்கு வசதிகள் இல்லாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
சாலை அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இன்னும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றனர். நாஞ்சிக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தஞ்சையில் ஜவுளிக்கடை, உணவகம், மளிகைக்கடைகள், பேன்சி ஸ்டோர் உட்பட பல கடைகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்கள் வீட்டுக்கு இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் போது தெரு விளக்கு வசதி இல்லாததால் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது.
எனவே இப்பகுதியில் முறையான தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவர். எனவே இதுகுறித்து அதிகாகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.