ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்ற சோட்டானிக்கரை அம்மன் ஜோதிட நிலையம் நடத்திய சாமியார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி பெண்ணை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் கொடிமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராசு என்பவரின் மகன் கருணாநிதி வயது 48. இவர் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது வீட்டை விட்டு ஓடிச் சென்று கேரளாவில் உள்ள சோட்டானிக்கரையில் மாந்திரீகம் ஜோதிடம் போன்றவற்றை கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஓசூருக்கு சென்ற கருணாநிதி அங்கு ஜோதிட நிலையம் ஆரம்பித்து செய்வினை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கர்நாடகாவை சேர்ந்த லதாபாய் மல்லிகா என்கிற இரண்டு பெண்களை சாமியார் கருணாநிதி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு எட்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சென்னை ஓசூர் உள்ளிட்ட 14 இடங்களில் கிளை அமைத்து செய்வினை எடுத்து வந்துள்ளார். தற்போது சென்னை மற்றும் ஓசூரில் மட்டும் கிளை இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் சோட்டானிக்கரை அம்மன் ஜோதிட நிலையம் என்கிற பெயரில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற நிறுவனம் என்று குறிப்பிட்டு இங்கு 10 வருட பில்லி சூனியம் செய்வினை போன்றவை பத்து நிமிடத்தில் எடுக்கப்படும், 10 வருட வெள்ளைப்படுதல் பத்து நிமிடத்தில் சரி செய்யப்படும், 20 வருடம் குழந்தை இல்லாதவர்கள் பெண்கள் வர வேண்டாம், ஆண்கள் வந்தால் இரண்டு மாதங்களில் குழந்தை பாக்கியம் கிடைக்க வழி செய்யப்படும் என வெளியில் போர்டு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையாவுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது ஜோதிட நிலையத்தில் இவர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆவடி நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவராணி என்பவர் தொலைக்காட்சியில் சாமியாரின் விளம்பரத்தை பார்த்துவிட்டு வடபழனியில் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து ஜாதகம் பார்த்து வந்த கருணாநிதியை சந்தித்துள்ளார்.
அப்போது கருணாநிதி உன் கணவர் பெயரில் செய்வினை இருக்கிறது. அதனை எடுத்துத் தருகிறேன் என்று எந்திரம் போன்றவற்றை கொடுத்துள்ளார்.10 நாட்களில் யுவராணியின் பிரச்சனை சரியானதால் சாமியாரை முழுமையாக நம்பி அவர் கேட்டபோதெல்லாம் நேரிலும் வங்கி கணக்கு மூலமாகவும் 24 லட்சம் ரூபாய் மற்றும் 16 சவரன் தங்க நகைகளை ஆறு மாத காலத்திற்குள் அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் யுவரானியிடம் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்டு அவரிடம் நெருக்கடி கொடுக்க யுவராணி சாமியாரிடம் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து சாமியார் தனது இரு மனைவிகளுடன் சொந்த ஊரான கொடிமங்கலத்திற்கு வந்துள்ளார். கடந்த ஏழு வருடங்களாக சாமியாரிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சிகளில் யுவராணி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆறு மாத காலமாக திருவாரூரில் தங்கி பணத்தை கேட்டு வந்துள்ளார். அதற்கு அவரது மனைவிகள் மட்டுமே பதில் கூறி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சாமியார் வசிக்கும் கொடடிமங்கலம் ஊருக்குச் சென்று ஊர் பஞ்சாயத்தில் யுவராணி முறையிட்டுள்ளார். இதனையடுத்து ஊர் பஞ்சாயத்து கூடி பேசிக் கொண்டிருந்தபோது சாமியார் கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவி மல்லிகா இருவரும் சேர்ந்து யுவராணியை கடுமையாக தாக்கியதில் அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் யுவராணி புகார் அளித்ததின் அடிப்படையில் சாமியார் கருணாநிதி மற்றும் அவரது இரண்டாவது மனைவி மல்லிகா ஆகியோர் மீது கடுமையான ஆயுதங்களால் தாக்குதல் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் சாமியார் தமிழ்நாடு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.