தஞ்சாவூர்: திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது. அரசியல் சூழ்ச்சியிலிருந்து டெல்டாவை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றியுள்ளார் என்று நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டி.ஆர். பாலு பேசியதாவது:
காவிரி டெல்டா பகுதி ஈராயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தது. அதுபோல, இப்போது நிலக்கரி சுரங்கத் திட்டத்தால் சோதனையை எதிர்கொண்டது. அரசியல் சூழ்ச்சியிலிருந்து டெல்டா பகுதியைத் தமிழக முதல்வர் காப்பாற்றியுள்ளார்.
மைக்கேல்பட்டி, வடசேரி, சேத்தியாதோப்பு ஆகியவற்றை மையமாக வைத்து 101 இடங்களில் நிலக்கரியைத் தோண்டி எடுப்பதற்காக மத்திய அரசு டெண்டர் அறிவித்தது. இதை செயல்படுத்தினால் வானம் பார்த்த பூமியாகிவிடும். இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மையைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது என 2020 ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், நிலக்கரி திட்டத்தைக் கொண்டு வந்தால் பாழ்பட்டுவிடும் என்பதால், அந்த ஆபத்திலிருந்து தமிழக முதல்வர் காப்பாற்றியுள்ளார். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், இந்த தகவல் அறிந்தவுடன் மத்திய அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசி, 24 மணிநேரத்தில் தடுத்து நிறுத்தினோம். இதற்காக விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது நமது கடமை.
பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் பல முறை கேட்டும், அதற்கு பதிலே இல்லை. நான் ரூ. 10 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக கூறிய அண்ணாமலை நேரடியாக நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். ஆனால், 12 நாள்களாகியும் என் மீது வழக்கு தொடுக்கப்படவில்லை.
இதனால், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலையை மே 8 ஆம் தே முதல் குற்றவியல் வழக்கை தொடுக்கவுள்ளேன். அதன் பிறகு அண்ணாமலையின் நடவடிக்கையைப் பார்த்து உரிமையியல் வழக்கு தொடரவுள்ளேன். திமுக தலைவரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதற்காக என்னென்னமோ செய்கின்றனர். அதை எல்லாம் எதிர்கொள்வதற்கு லட்சக்கணக்கானோர் தயாராக இருக்கின்றனர். திமுகவை தொட்டுப் பார்க்கவோ, அசைத்து பார்க்கவோ யாராலும் முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் பலர் பேசினர்.
முன்னதாக, மேயரும், மாநகரச் செயலருமான சண். ராமநாதன் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலர் அ. புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.