தஞ்சாவூர்: தமிழ் பெயர் பலகை வைக்கணும்... திருச்சி- நியூ ஜல்பாய்குரி இடையே புதிய அம்ரித் பாரத் ரயிலில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில் சேவையை கடந்த 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகம் - மேற்கு வங்காளம் இடையே புதிதாக 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அதாவது இந்த ரயில்களான மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி - திருச்சி, தாம்பரம் - சந்திரகாச்சி, நாகர்கோவில் - ஜல்பாய்குரி இடையே வாராந்திர ரயில்களாக இயக்கப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டை இணைக்கும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நாகர்கோவில் - ஜல்பாய்குரி அம்ரித் பாரத் ரெயிலானது (வண்டி எண்-20604) சனிக்கிழமை மதியம் 1.45 மணிக்கு மேற்கு வங்காள மாநிலம் ரங்கபாணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு 7.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இந்த ரயில் தமிழ்நாட்டின் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.
ஜல்பாய்குரி - திருச்சி இடையிலான அம்ரித் பாரத் ரெயிலானது (20610) சனிக்கிழமை மதியம் 1.45 மணிக்கு ஜல்பாய்குரியில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் 2.15 மணிக்கு திருச்சி வந்தடையும். இந்த ரயில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலானது நேற்று மதியம் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்து.
அந்த ரயிலில் உள்ள பெயர் பலகை இந்தியில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில் தமிழ் வார்த்தையும் இல்லை, ஆங்கில வார்த்தைகளும் இல்லை. தமிழகத்தில் அதிகமானோருக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாது. எனவே பொது மக்களின் நலன் கருதி தமிழ்ப் பெயர் பலகை வைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.