தஞ்சாவூர்:  தஞ்சாவூரில் நூற்றாண்டு கண்ட பிளேக் மேல்நிலைப்பள்ளியில் 1985ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து சந்தித்து சமத்துவ பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். இதில் மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன், சிக்கன் கபாப்,  விதவிதமான கேக், ஐஸ்கிரீம் வகைகள் என 113 வகை அசத்தலான உணவுகள் பரிமாறப்பட்டன.

Continues below advertisement

தஞ்சையில் நூற்றாண்டு கண்ட  பிளேக் மேல்நிலைப்பள்ளியில் 1985ம் ஆண்டு படித்த இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்கள் சந்தித்து சமத்துவ பொங்கல் வைத்து குடும்பத்துடன்  கொண்டாடி மகிழ்ந்தனர். தஞ்சாவூரில் மிகவும் பழமை வாய்ந்தது பிளேக்  மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் 1985ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தங்கள் குடும்பத்தினருடன் சந்தித்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

அந்த வகையில் தஞ்சாவூரில் 10ம் ஆண்டாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த முன்னாள் மாணவர்களில் மருத்துவர்கள், இன்ஜினியர்கள், காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இந்த நிகழ்வில் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

Continues below advertisement

பின்னர் கைப்பந்து எறிதல், பந்து கைமாற்றுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஆயிரம் இரண்டாம் பரிசாக 500 மூன்றாம் பரிசாக 300 ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன,

முன்னாள் மாணவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மியா கார்ஸ் இக்பால், ஏவிஎம் ஆனந்த், மார்பிள் வேர்ல்டு அன்புராஜ், கோபால், ரவி ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். பின்னர் 113 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரின் சார்பிலும் இல்லாதோருக்கு இயன்றதை செய்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் 18 பேருக்கு தையல் இயந்திரங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் தரப்பில் கூடுகையில், கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் மாணவர்கள் நாங்கள் அனைவரும் நேரில் சந்தித்து பேசிக்கொள்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. படித்த காலத்தில் இருந்த உணர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் நாங்கள் பேசி எங்களை புத்துணர்வு படுத்திக் கொள்கிறோம். பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் நாங்கள் ஒரே குடும்பமாக சந்திக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.