தஞ்சாவூர்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் மேல வீதியில் பாரம்பரிய கோலப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக ஆண்டுதோறும் 4 நாட்கள் கொண்டாடப்படுவது தான் பொங்கல் திருநாள். இப்பண்டிகை தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை வருடம் தோறும் நடைபெறும் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறுவடை திருவிழா என்னும் இப்பண்டிகை பொங்கல் என்று கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை மொத்தம் நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. மேலும் இப்பண்டிகை தமிழ் மற்றும் தெலுங்கு சமூகத்தினரால் அனுசரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகளவில் விவசாயம் தான் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக உள்ளது. இப்பண்டிகை பொதுவாக ஜனவரி மாத்தில் 14-ம் தேதி போகி பண்டிகை முதல் தொடங்கி 17-ம் தேதி காணும் பொங்கல் வரை கொண்டாடப்படுகிறது.
அதிலும் பொங்கல் பண்டிகையின் போது பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் பெண்களுக்கு பாரம்பரிய புள்ளிக் கோலம் போடும் போட்டி நடத்தப்பட்டது. பாரம்பரிய புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்து வரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலைக்குத்தாக வரும் புள்ளித் தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும்.
இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே நேர்ப் புள்ளிகள், ஊடு புள்ளிகள் என்று கூறுவர். கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும். கோலங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல. வாழ்க்கையை நாம் வாழ வேண்டிய முறையை நமக்கு உரைத்து மட்டுமல்ல உணர்த்திச் சொல்லும் வழிகாட்டி. காண்பதற்கு பல நெளிவுகள், சுழிவுகள், சிக்கல்கள் தென்பட்டாலும் முதலும் முடிவும் மிக நேர்த்தியாக ஒன்று சேரும் விசித்திர வித்தைதான் கோலங்கள்.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கோலப் போட்டியில் 150 பெண்கள் கலந்து கொண்டு 5க்கு 5 அடி அளவில் மேல வீதியில் சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு வரிசையாக பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனர். இப்போட்டியில் நடுவர்களாக செயல்பட்ட வீ பாரம், இன்னர்வீல் சங்கம், குந்தவை ரோட்டரி சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் பார்வையிட்டு சிறந்த கோலங்களைத் தேர்வு செய்தனர்.
இதில், முதலிடத்தை செவ்வப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்த சாந்தி, இரண்டாமிடத்தை கருப்பூரைச் சேர்ந்த யுவஸ்ரீ, மூன்றாமிடத்தை மகர்நோன்புசாவடியைச் சேர்ந்த கவிதா ஆகியோரும், ஆறுதல் பரிசாக 10 பேரும் பெற்றனர். இப்பரிசுகளை மாவட்ட ஆட்சியரின் துணைவியார் சூசன் ஜேக்கப் வழங்கினார்.
விழாவில் மாமன்ற உறுப்பினர் ஏ. சசிகலா, பாம்பே ஸ்வீட்ஸ் பிரதீப், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.