வேலியே பயிரை மேய்ந்த கதையாக தஞ்சாவூரில் போலீஸ் கேன்டீன் என்று கூறப்படும் காவல் பல்பொருள் அங்காடியில் ரூ. 40 லட்சம் முறைகேடு நடந்தது வெட்ட வெளிச்சமானது. இந்த மோசடியை செய்த சப் இன்ஸ்பெக்டர்,  ஒரு பெண் முதல்நிலைகாவலர், ஒரு ஆண் காவலர் மற்றும் அவரது மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் அலுவலகம் எதிரே தஞ்சாவூர் காவல் பல்பொருள் அங்காடி செயல்படுகிறது. இந்த அங்காடியில் காவல் துறையினருக்கு அனைத்து விதமான பொருள்களும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மளிகைப்பொருள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
 
இந்நிலையில், இந்த அங்காடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உள்ள கணக்குகளைத் தணிக்கை அலுவலர்கள் அண்மையில் தணிக்கை செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அங்காடிக்கு விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட மின்னணு உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை நிலையத்தில் இல்லை என்பதும், ஆனால், அப்பொருள்கள் வாங்கப்பட்டதாக ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் இருப்பதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி அப்பொருள்களை விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அந்த பொருள்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. சிறிது சிறிதாக ரூ.40 லட்சம் அளவிற்கு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை அனுப்பி இந்த மோசடி நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.





இந்த அங்காடியில் பணியாற்றி வரும் காவலர் பாலச்சந்திரன் குறைந்த விலையில் வாங்கப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் மளிகை பொருள்களைத் தனது மைத்துனர் பாஸ்கரனின் கடைக்கு அனுப்பி முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் தணிக்கை அலுவலர்கள் புகார் செய்தனர். இதன்பேரில் அங்காடியில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் வீராசாமி (54), முதல்நிலை காவலர் வீரம்மாள் (29), பாலச்சந்திரன் (45), பாலச்சந்திரனின் மைத்துனர் பாஸ்கரன் (40), இவரது சகோதரியும், பாலச்சந்திரனின் மனைவியுமான சித்ரா (38) ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடையதாக 3 பெண் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இங்கிருந்து எடுத்து வெளிச்சந்தையில் விற்பனைக்காக வைத்திருந்த 70 சதவீத பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலியாக இருந்து பாதுகாக்க வேண்டிய போலீசாரே தாங்கள் சார்ந்த துறையினருக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டிய பொருட்களை இவ்வாறு மோசடி செய்து வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்ற சம்பவம் போலீசார் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண