தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும் மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது. தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு 100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு மாவட்ட இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது, தமிழக அரசு பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர்களின் விலை உடனடியாக குறைக்க வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். அப்போது, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பைக், கார் போன்ற வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்துள்ளது.
இதனால் ஏழை எளிய , நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு வரியை குறைத்தால், பெட்ரோல் டீசல் விலை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால் தமிழக அரசு குறைக்காமல், மக்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்து வருகின்றது. இதனை தமிழக அரசுக்கு தெரிவிக்கும் வகையில், பாஜகவை சேர்ந்தவர்கள், மூன்று குதிரை வண்டியில் ஊர்வலமாக கோஷமிட்டபடி வந்தனர். தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இருந்து புறப்பட்ட குதிரை வண்டி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சென்றது. இதனால் தஞ்சாவூர் நகரப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞரணி செயலாளர் கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீஷ், அமைப்புசாரா தொழிலாளர் அணி செயலாளர் பாண்டிதுரை, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் ராஜேஸ்வரன், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர்கள் அருண், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ, வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். மகளிரணி மாவட்ட தலைவி பூமிசெல்வி வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கென்னடி, முரளி, ஆசைக்கனி, ஜீவஜோதி, மாநகர தலைவர்கள் ரமேஷ், வெங்கடேசன், மாநகர செயலாளர் விக்னேஷ்குமார், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் இளைஞரணியினர், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.