தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக விளங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். இந்த நகரை மேலும் அழகாக்கி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் நிர்வாகத்தினர்.

Continues below advertisement

சோழப் பேரரசின் தலைநகராக இருந்ததால் இந்திய வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பிரகதீஸ்வரர் கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட ஒரு அற்புதமான கட்டிடக்கலைப் படைப்பாகும், இது சோழர்களின் கலைத்திறனையும், பக்தியையும் பறைசாற்றுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகராகவும் உள்ளது. தற்போது சுற்றுலாப்பயணிகளின் விருப்ப நகராகவும் மாற்றம் அடைந்து வருகிறது.

Continues below advertisement

தஞ்சாவூர் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருப்பதால், விவசாயத்திற்கும் பெயர் பெற்றது. இந்நகரம் "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இப்பகுதியில் விளையும் நெல் மற்றும் பிற பயிர்கள் மாநிலத்தின் உணவு உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகின்றன. தஞ்சாவூரின் பாரம்பரிய உணவு வகைகள், குறிப்பாக அரிசி அடிப்படையிலான உணவுகள், இப்பகுதியின் விவசாய செழிப்பை பிரதிபலிக்கின்றன. மேலும், இந்நகரம் கைவினைப் பொருட்கள், குறிப்பாக பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் வெண்கலச் சிலைகளுக்கு புகழ்பெற்றது. இவை அனைத்தும் தஞ்சாவூரை ஒரு கலாச்சார, வரலாற்று மற்றும் பொருளாதார மையமாக உயர்த்துகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க தஞ்சாவூரை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் நிர்வாகத்தினர் புதுப்பொலிவு பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்று சாலையின் மையப்பகுதியில் பூச்செடிகள், பல வண்ணங்களில் ஒளிரும் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதுதான்.

தஞ்சை நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய பஸ் நிலைய புனரமைப்பு, திருவையாறு பஸ் நிலையம் வணிக வளாகமாக மாற்றுதல், காமராஜர் மார்க்கெட் புனரமைப்பு, வணிக வளாகங்கள் கட்டுதல், சாலை சீரமைப்பு, எல்.இ.டி. விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது அடுத்த கட்டமாக தஞ்சை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளை, போக்குவரத்து நிறைந்த இடங்கள், சாலை மைய தடுப்பு வட்டங்கள் உள்ளிட்டவைகள் சீரமைத்து அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைத்து அதில் வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றும் அமைக்கப்படுகிறது.

தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி சாலையின் மைய தடுப்பு, ராஜராஜசோழன் சிலை எதிர்புறம் இருக்கும் சாலை அழகுபடுத்தும் பணிகள், சிவகங்கை பூங்கா எதிரில் உள்ள 2 சாலை மைய வட்டங்கள் அழகுபடுத்தும் பணிகள், கொண்டிராஜபாளையம் சாலை மைய வட்டங்கள் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேபோல் ராஜப்பா நகரில் உள்ள மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், ரோகிணி மருத்துவமனை பகுதியில் உள்ள மைய சாலை தடுப்பு அழகுபடுத்தும் பணிகள் ஆகிய பணிகள் நடந்துள்ளது. இந்த பணிகள் சாலை தடுப்பு மையபகுதியில் அழகு செடிகள், ரவுண்டானா சீரமைப்பு, விளக்கு வசதிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.  மேலும் முனிசிபல் காலனி மைய சாலை தடுப்பு, வல்லம் குவாரி ரோடு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், யாகப்பா நகர் மைய சாலை தடுப்பு அழகுபடுத்தும் பணிகள், அண்ணாசாலை ரோடு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள், கீழவாசல் கடைத்தெரு மைய சாலை தடுப்பு அழகுப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்த இடங்களில் பல்வேறு வகையில் அழகுப்படுத்தும் வகையில் வண்ணப் பூக்கள் பூக்கும் வகையிலான செடிகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் மைண்ட் ஜெட் செயற்கை நீரூற்று அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் அழகுபடுத்தும் பணிகள் முடிவடையும் போது தஞ்சை மாநகராட்சி அனைத்து முதன்மை சாலைகளும், முக்கிய சந்திப்புகளும் மிகவும் பொலிவுபெற்று விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராமநாதன் ரவுண்டானா, தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகில் பூங்கா, வல்லம் பிள்ளையார்பட்டி ரவுண்டானா, கொண்டிராஜபாளையம் ரவுண்டானா என பல்வேறு ரவுண்டானா பகுதிகளை அழகுமிளிர மாற்றங்களை செய்துள்ளது தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம். இது தஞ்சைக்குள் வரும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது. 

இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், சுற்றுலா நகரங்களின் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக தஞ்சாவூர் உள்ளது. பிற மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் தஞ்சாவூருக்கு வருகின்றனர். அழகு நிறைந்த இந்த நகரை மேலும் அழகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக பராமரிக்கப்படுகிறது. ரவுண்டானாக்களை பராமரித்து நீருற்றுகள் அமைத்து வர்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் உள்ளதால் அதிகளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக தரமான சாலைகள், குடிநீர் என மாநகராட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வதே கண்கூடான ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழாவிற்கு பெரிய கோயில், மாநகராட்சி அலுவலகம், ஆற்றுப்பாலம் ரவுண்டானா, ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை உட்பட பல பகுதிகள் தகதகவென்று தங்கம் போன்று மின்னொளியில் மின்ன மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த வளர்ச்சிப்பணிகளுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. மேயர் சண்.ராமநாதன் மற்றும் கவுன்சிலர்களுக்கு மக்கள் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.