தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற பிரமாண்ட பெரிய கோயிலில் நாளை (5ம் தேதி) பெருவுடையாருக்கு ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானமும், அறநிலையத்துறையும் மும்முரமாக செய்து வருகின்றன. 

Continues below advertisement

தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தனர். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுத்து வழிபட்டார். அவரது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றினர்.

மாமன்னன் ராஜராஜன் உலகமே கண்டு வியக்கும் வண்ணம் பிரமாண்டமான கோயில் கட்டி அங்கு ஓர் மாபெரும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அத்தகைய பெருமை பெற்ற தஞ்சாவூரும், வானளாவ எழுந்து நிற்கும் இராஜராஜேச்சரம் எனப்படும் பிரஹதீஸ்வரருக்கான பெரிய கோயிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஆச்சரியங்களையும் அதிசயங்களை கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. 

Continues below advertisement

இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.

இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.

கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். பொதுவாக அஸ்திவாரம் என்பது ஒரு கட்டிடத்தின் பாரத்தை தாங்கும் ஆதார சக்தியாகும். கட்டிடம் எந்த அளவுக்கு உயரமாக கட்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதன் அஸ்திவாரமும் வலுவாக, ஆழமாக இருக்கவேண்டும்.

216 அடி உயரத்துடனும், முழுக்க முழுக்க அதிக எடைகொண்ட கிரானைட் கற்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய கோவிலுக்கு எந்த அளவுக்கு அஸ்திவாரம் அமைத்திருக்க வேண்டும். இன்றைய கட்டுமான வல்லுநர்களை கேட்டால் 50 அடி ஆழத்திலும், 50 அடி அகலத்திலும் போட்டால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்டமான பெரிய கோவிலுக்கு தோண்டப்பட்ட அஸ்திவாரம் வெறும் 5 அடி ஆழம் தான் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். அது தான் அறிவியல் உண்மையாகும். அங்கு தான் நம் தமிழனின் அறிவியல் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

இத்தகைய சிறப்பு மிக்க ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு நாளை (5ம் தேதி) பச்சரிசி, காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் பெரியகோயிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப் பெரிய லிங்கத்திருமேனியாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. 

இத்தகையை சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.